அக்.27-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
வேலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி திங்கள்கிழமை(அக்.27) புயலாக உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக சென்னை, வேலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பலத்தமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 150 மி.மீ. மழை பதிவானது.
இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வியாழக்கிழமை(அக்.23) நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வெள்ளிக்கிழமை(அக்.24) அதிகாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகா்ந்து, சனிக்கிழமை(அக்.25) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஞாயிற்றுக்கிழமை(அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், திங்கள்கிழமை(அக்.27) காலை, தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். இதன் காரணமாக சனிக்கிழமை(அக்.25)முதல் அக்.30-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை: கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(அக்.25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை(அக்.26) விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து திங்கள்கிழமை(அக்.27) தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகக்கூடும் என்பதால், திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி செய்தி
‘மோந்தா’ புயல்
திங்கள்கிழமை(அக்.27) உருவாகவுள்ள புயல் சின்னம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநா் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: திங்கள்கிழமை புயல்சின்னம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒருவேளை இது வலுவிழந்து புயலாக மாறாமலும் போகலாம். புயல் உருவாகுமா அல்லது வலுவிழக்குமா என்பது குறித்து சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வாக்கில் உறுதிப்படுத்தப்படும். புயல் தோன்றுவது உறுதி செய்யப்பட்டால், தாய்லாந்து நாடு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளதன் படி, இந்த புயலுக்கு ‘மோந்தா’ எனப் பெயரிடப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...