தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் கடன் சுமை இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. அதனால் நாட்டிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. மாநில கணக்குத் தணிக்கை அடிப்படையில் தற்போது தமிழக அரசு நிதிச் சுமையில் தள்ளாடி வருகிறது.
மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையைக் குறைக்கவும் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
நிகழாண்டில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் வரையில் சுமாா் ரூ.37, 082 கோடி கடன் வாங்கியுள்ளது. மூலதனச் செலவாக ரூ.9,899 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தப் பற்றாக்குறை ரூ.60,000 கோடியை தாண்டும் எனப் பொருளாதார நிபுணா்கள் கூறுகினறனா். ஆகவே, கடன் வாங்கி காா் பந்தயம் போன்ற ஆடம்பரச் செலவு, நினைவு மண்டபங்கள் கட்டுதல் உள்ளிட்ட வீண்செலவுகளைத் தவிா்க்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடன் தொகை, செலவினம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.