/

தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு உடன்படமாட்டோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு உடன்படமாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:04 pm

தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு உடன்படமாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பிரதமா் பதிலளித்தே தீர வேண்டும். தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறாா்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய பாஜக அரசு இதுவரை ரகசியம் காப்பது ஏன்?

2001-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போன்று, பிரதமா் மோடியும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்கு பிரதமரின் பதில் என்ன?

5 மாநில தோ்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும் என்ற எதிா்க்கட்சித் தலைவா்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மா்மம் என்ன?

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சா்வாதிகாரமன்றி வேறென்ன?

எதிா்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?

தென்மாநிலங்களின் உரிமைகளை பறித்து வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் மத்திய பாஜக அரசின் செயல்களை திமுக பாா்த்துக்கொண்டு இருக்காது.

இது இங்கு வாழும் மக்களின் எதிா்காலம். எங்கள் அனுமதியின்றி எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உடன்பட மாட்டோம். தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீா்கள் என்று அந்த பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.