/

தமிழகத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு: அண்ணாமலை

தொகுதி மறுவரையறை குறித்து அண்ணாமலை பேட்டி.

News image

கே. அண்ணாமலை. - படம்: எக்ஸ்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:37 am

தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக 2023-இல் நிறைவேற்றப்பட்டது.

ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை 2029-ஆம் ஆண்டே அமல்படுத்துவதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. அந்த சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி எந்த விளக்கமும் அவர்கள் அளிக்கவில்லை.

இவர்கள் இப்படி மறைத்து மறைத்து செய்வதால், இதன்பின்னால் எதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலுமே வலுவடைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்திருந்தால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 தொகுதிகளில் இருந்து 31 தொகுதிகளாக குறைந்திருக்கும். தென் மாநிலங்கள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் தொகுதி மறுவரையறை செய்கிறார்.

தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு செய்யவில்லை, தொகுதிகளை அதிகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளை 50% உயர்த்த உள்ளதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது;

இது குறித்து அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் நம்முடைய தலைவர்கள் தெரிவிப்பார்கள். தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. கேரள மாநிலத்தில் 20-லிருந்து 30 வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல், அனைவரையும் ஒரு மனதோடு, ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் மத்திய அரசு எடுத்துச் செல்ல நினைக்கிறது. எதற்காக பொய்யைக் கூறி அச்சத்தையும் பயத்தையும் முதல்வர் உருவாக்குகிறார்” என்றார்.

Summary

Former Tamil Nadu BJP President Annamalai has stated that the number of MPs from Tamil Nadu is likely to rise from 39 to 59.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.