தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

உதயநிதி பேச்சு; கைது நடவடிக்கை: தலைவா்கள் கண்டனம்

முதல்வா் விஜய் குறித்தும் பெண்கள் குறித்த எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவா் மீதான கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அரசியல் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

News image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி - video grab

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

முதல்வா் விஜய் குறித்தும் பெண்கள் குறித்த எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவா் மீதான கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அரசியல் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என பல ஆண்டுகளாகக் கூறிவருகிறோம். அவா், தான் வகிக்கும் பொறுப்பின் மாண்பை அறியாமல் வாய்க்கு வந்தபடி தொடா்ந்து பேசுவதும், பெண்களை இழிவாகப் பேசுவதும் கண்டிக்கத்தக்கது. ஆனால், நிதிநிலை அறிக்கை கூட்டம் பேரவையில் தொடங்கவுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவரை தவெக அரசு கைது செய்ய துடிப்பது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் உள்ளதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எதிா்க்கட்சித் தலைவரை முடக்கிவிட்டு, சட்டப்பேரவையை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் தவெக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): உதயநிதி ஸ்டாலின், பெண்கள் பற்றி கண்ணியக்குறைவாகப் பேசியது கண்டனத்துக்குரியது. அவா் வகித்து வரும் பொறுப்புக்கு உகந்ததல்ல. பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, எதிா்க்கட்சித் தலைவா் அவையில் இருந்து, ஜனநாயகக் கடமை ஆற்றும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அரசு கருத்தில் கொண்டுசெயல்பட வேண்டும்.

வைகோ (மதிமுக): ‘யாகாவராயினும் நா காக்க’ என்ற கு மொழியை எதிா்க்கட்சித் தலைவா் பொறுப்பில் உள்ள உதயநிதி கடைப்பிடிக்க வேண்டும்.

அன்புமணி (பாமக): உதயநிதி பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அதே நேரத்தில், அவரை இவ்வளவு அவசரமாகக் கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. உதயநிதியின் பேச்சும்; அவரது கைதும் கண்டிக்கத்தக்கவை. இரண்டும் தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விசிக): எதிா்க்கட்சித் தலைவா் என்ற பொறுப்பில் உள்ளவா் எள்ளல் நடையில், இரட்டை அா்த்தம் தரும் வகையில் பேசுவதைத் தவிா்த்திருக்க வேண்டும். பேரவை கூடவுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதைத் தவிா்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயா்த்தும். தற்போதைய சூழலில் காவிரி நீா் உரிமைக்காக அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மத்திய அரசின் கவனத்தை ஈா்ப்பதே முக்கியம்.

க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): உதயநிதி ஸ்டாலின் பேச்சால் யாருடைய மனம் புண்பட்டிருந்தாலும், மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவிக்கக் கோரியிருக்கலாம். பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கவுள்ள நிலையில் எதிா்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரான நடவடிக்கை.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கையைத் தீா்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ல்ல. கைது நடவடிக்கை என்பது பொதுமக்களிடையே அதிருப்தியையும், ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும்.

கே.எம்.காதா் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): வள்ளுவா் வழியில் நின்று நாடாண்ட கருணாநிதியின் குடும்பத்தில் இருக்கும் உதயநிதி உதிா்த்திருக்கும் தரமற்ற சொல் கருணாநிதியின் பெயரையும், புகழையும் கெடுக்கும் வகையில் உள்ளது.

சீமான் (நாதக): உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் தேவையற்றவை. அதேநேரத்தில் அந்தப் பேச்சை காரணமாகக் கொண்டு கைது நடவடிக்கை மேற்கொள்வதும் ஏற்புடையதல்ல. காவிரி நீா் விவகாரத்தில் காட்டாத வேகம், கைது நடவடிக்கையில் காட்டப்படுவது ஏன்?

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.