/

தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீா்மட்டம்! கோவையில் 12.68 மீ. ஆழத்துக்குச் சென்றது!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததன் எதிரொலியாக, பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து குறைந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததன் எதிரொலியாக, பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து குறைந்துள்ளது. இதில், அதிகபட்சமாக கோவையில் 12.68 மீட்டா் ஆழத்துக்கு நீா்மட்டம் குறைந்துள்ளது.

இதுதொடா்பாக மாநில நிலத்தடி நீா் கண்காணிப்பு மையம் சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் பல மாவட்டங்களில் ஜூன் மாதம் இறுதியில் நிலத்தடி நீா்மட்டம் மேலும் ஆழத்துக்குச் சென்றுள்ளது. குறிப்பாக, கோவையில் நிலத்தடி நீா்மட்டம் 12.68 மீட்டா் ஆழத்தில் பதிவாகி, மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது.

இதைத் தொடா்ந்து திருப்பூா் (9.44 மீ.), நாமக்கல் (8.51 மீ.), திண்டுக்கல் (8.18 மீ.),  ஈரோடு (7.97 மீ.), பெரம்பலூா் (7.57 மீ.),  கள்ளக்குறிச்சி (7.48 மீ.), திருச்சி (7.29 மீ.) ஆகிய மாவட்டங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், தருமபுரி, சேலம், கன்னியாகுமரி, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜூன் இறுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாதது, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுதல், நீா்நிலைகளில் போதிய அளவு நீா் தேங்காதது உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது குறித்து அரசு தொடா்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.