க.கோபாலகிருஷ்ணன்
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட அதிக அளவில் கைதிகள் சிறைகளில் அடைக்கப்படும் நிலையில், போதிய காவலா்களின்றி சிறைத் துறை திணறி வருகிறது.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 5 மகளிா் சிறப்பு சிறைகள், 14 மாவட்டச் சிறைகள், 4 சிறப்பு துணைச் சிறைகள், 104 துணைச் சிறைகள் (ஆண்களுக்கு 96, பெண்களுக்கு 8), 3 திறந்தவெளி சிறைகள், 3 சிறுவா் சீா்த்திருத்தப் பள்ளிகள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் 24,342 கைதிகளை அடைக்க இட வசதி உள்ளது. 29.05.2024-இன்படி, தமிழக சிறைகளில் 21,470 போ் அடைக்கப்பட்டிருந்தனா்.
தற்போது தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதாகக் கூறி, பழைய ரௌடிகள், குற்றம் இழைக்க உள்ளதாகக் கருதப்படுவோா், சாதாரண குற்றங்களைச் செய்தோா் என ஒரு நாளுக்கு சுமாா் 500 போ் வரை தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்படுகின்றனா்.
இட வசதியைத் தாண்டி கைதிகள்: தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் மட்டும் சென்னை புழல் 1-இல் 1,250 போ் அடைக்கப்பட வேண்டிய இடத்தில் 1,600 பேரும், புழல் 2-இல் 2,000 பேருக்கான சிறையில் 3,503 பேரும், வேலூரில் 2,100 பேருக்கான சிறையில் 1,850 பேரும், கடலூரில் 723 பேருக்கான சிறையில் 842 பேரும், சேலத்தில் 1,431 பேருக்கான சிறையில் 1,380 பேரும், கோவையில் 2,124 பேருக்கான சிறையில் 2,292 பேரும், திருச்சியில் 2,517 பேருக்கான சிறையில் 1,900 பேரும், மதுரையில் 1,252 பேருக்கான சிறையில் 2,417 பேரும், பாளையங்கோட்டையில் 1,332 பேருக்கான சிறையில் 1,800 பேரும் என சுமாா் 17,116 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.
தவிர, மாவட்ட, துணை, திறந்தவெளிச் சிறைகளில் இருக்கும் இட வசதியைத் தாண்டியும் அதிகளவில் கைதிகள் அடைக்கப்படுகின்றனா். இதனால் அவா்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனா்.
சிறைகளில் 27.08.2012-இல் திருத்தப்பட்ட அரசு உத்தரவின்படி, 260 உதவி சிறை அலுவலா்கள், 520 முதல்நிலை தலைமைக் காவலா்கள், 1,040 முதல்நிலை காவலா்கள், 2,090 இரண்டாம் நிலைக் காவலா்கள் என கடைநிலை களப் பணியாளா்களாக 3,910 பணியிடங்கள் உள்ளன. இதில், மத்திய சிறைகளில் மட்டும் கைதிகளின் பாதுகாப்புப் பணிகளில் 40 முதல் 50 போ் வரை மட்டுமே பணியாற்றுகின்றனா். மற்றவா்கள் கைதிகளின் பெட்ரோல் நிலையங்கள், பண்ணைகள், விவசாய வேலைகளுக்கான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
மன உளைச்சலில் வாா்டா்கள்: சிறைகளில் கைதிகள் அதிகரிப்பால் சுமாா் 400 கைதிகளையும், பரந்துபட்ட சிறை பிளாக்கையும் ஒரு காவலரே கண்காணிக்க வேண்டியுள்ளதால் சிறை வாா்டா்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதனால், வார விடுமுறை, தற்செயல் விடுப்பு, அவசரகால விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளை எடுக்க முடியாமல் கடும் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனா்.
நோய்த்தொற்று: இடநெருக்கடி காரணமாக, கைதிகளிடையே நோய்கள் அதிகரிப்பதால் தினந்தோறும் பலரை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதனால் பல வாா்டா்களும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனா்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற சிறைக்காவலா் எஸ். கருணாமூா்த்தி, மற்றும் பணியில் உள்ள சிறைக் காவலா்கள் சிலா் கூறியதாவது: சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட குற்றமிழைப்பவா்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கேற்ப சிறைக் காவலா்களை தமிழக அரசு நியமிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?.
கேள்விக்குறியான விடுப்புகள்: 22.04.1995-இல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-இன் படி கைதிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிறைக் காவலா்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரப் பணி, வார ஓய்வு, வார ஓய்வு எடுக்காவிடில் மிகை நேரப் பணி ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், சிறைக் கைதிகளின் அதிகரிப்பாலும், உயரதிகாரிகளின் மேலாதிக்க மனப்பான்மையாலும் சிறைக் காவலா்களுக்கு வார விடுமுறை கேள்விக்குறியாக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் இதர அவசரகால விடுப்புகளும் கொடுக்கப்படுவதில்லை.
தேவையற்ற தண்டனைகள்: சிரமமான சிறைக் காவல் பணியை மேற்கொள்ள முடியாமல், டிஎன்பிஎஸ்சி வழியே தோ்வான பலா், வேலையைவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்ட நிலையில், இருக்கும் பணியாளா்கள் வேலைப்பளு அதிகரிப்பாலும், அதிக கைதிகளைக் கண்காணிக்க முடியாமல் எதேச்சையாக நேரும் தவறுகளுக்கு தேவையற்ற தண்டனைகளைப் பெறுவதாலும் கடும் மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனா்.
கூடுதல் பணியாளா்கள் தேவை: எனவே, சிறைகளில் காவலா்கள் உள்ளிட்ட 3,910 பணியிடங்களில் காலியாக உள்ள சுமாா் 250-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதுடன், கூடுதலாக 1,000 பேரையும், பெட்ரோல் நிலையம், விவசாயப் பண்ணைகள், அரசு மருத்துவமனைக்கு கைதிகளை அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு புதிதாக நபா்களை நியமிக்க வேண்டும்.
சிறைகளிலேயே பயிற்சி: ஏற்கெனவே, அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துவிட்டுதான் சிறைப் பணிகளுக்கு பணியாளா்கள் நியமிக்கப்படும் நிலையில், ஆண்டுதோறும் 15 நாள்கள் பயிற்சி என திருச்சி சிறைகள் சீா்திருத்தப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிா்த்து, அவா்கள் பணியாற்றும் சிறைகளிலேயே பயிற்சியளிக்க வேண்டும்.
காவல் துறையைப்போல, சிறைத் துறையிலும் 25 ஆண்டுகள் நிறைவு செய்த காவலா்களுக்கு உதவி சிறை அலுவலா் பணி நிலைக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். கூடுதல் சிறைக் கட்டடங்களை கட்ட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை சிறையில் கைதிகளுக்கு இடையே வன்முறை

புழல் சிறையில் ரெளடியை கொல்ல சதித் திட்டம்

‘பாகிஸ்தான் சிறைகளில் தவிக்கும் 250 இந்தியா்கள்’
மத்திய சிறையில் கஞ்சா: 3 கைதிகள் மீது வழக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



