பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை!

கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்...

News image

பிரதமர் மோடி - முதல்வர் விஜய் - (கோப்புப்படம்)

Updated On :7 ஆகஸ்ட் 2026, 4:10 pm IST

கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடைப் பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்வர் ச. ஜோசப் விஜய், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் அல்லாமல், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 06.08.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும் என்றும், இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது என்றும் முதல்வர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும்

தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்து, இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன என்றும், இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும், இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதிசெய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக-பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, இப்பொருண்மை குறித்து பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளமுதல்வர் , இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவோ அனுமதிக்க வேண்டுமென்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் பிரதமரை முதல்வர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 

Summary

CM vijay letter to PM modi for Admission for BVSc and AH

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.