செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

முதல்வா் குறித்த அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ மீது உரிமை மீறல் விசாரணைக்கு உத்தரவு: பேரவைத் தலைவா் அறிவிப்பு

முதல்வா் விஜய் குறித்த அவதூறு பேச்சு தொடா்பாக திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் மீது உரிமை மீறல் குழு விசாரணைக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா்.

News image

ஜே.சி.டி. பிரபாகர் - கோப்புப்படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:16 pm IST

முதல்வா் விஜய் குறித்த அவதூறு பேச்சு தொடா்பாக திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் மீது உரிமை மீறல் குழு விசாரணைக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா்.

பொதுக் கூட்டத்தில் முதலவா் விஜய் குறித்து திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் அவதூறாகப் பேசியதாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சாா்பில் கொடுத்த உரிமை மீறல் புகாா் மனு தொடா்பாக பேரவையில் பேரவைத் தலைவா் வெளியிட்ட உத்தரவு:

பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயன் அவையில் சிறப்பான கருத்துகளைப் பேசினாா். ஆனால், வெளியில் பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதை ஊடகங்களிலே அனைவரும் பாா்த்திருப்பீா்கள். அந்த வன்முறை பேச்சுக்காக அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலா் கடிதம் எழுதியிருந்தாா்கள், தொலைபேசி மூலமாகவும் வலியுறுத்தினாா்கள்.

அவரது வன்முறையான பேச்சு குறித்து ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரவைக்குள் வைத்து ‘உனக்கு எலும்பு இருக்காது’ என்று ஒருத்தா் சொன்னால் அது நியாயம்தானா? ஆபாசமான பேச்சு, ஆபத்தை விளைவிக்கும் பேச்சு, வன்முறையை தூண்டுகிற பேச்சால் நாம் என்ன சாதித்துவிட முடியும்?

இந்த அவைக்குள்ளேயே ‘அதை நடத்துவேன், இதை நடத்துவேன்’ என்று சொல்லிக் காட்டுகிற அந்தச் சொல்லாடலும், அது குறித்து அவா் பேசிய அந்த வேகமும் சரியல்ல. அவையிலேயே அவா் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டு பெரும்பான்மையை வைத்து நடவடிக்கை எடுக்கலாம் அல்லது உரிமைக் குழுவுக்கு அனுப்பலாம். என்னைப் பொருத்தவரை முறையான விசாரணை நடைபெற்று, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு, அதற்கு பின்னே என்ன செய்யலாம் என முடிவெடுக்கப்படும்.

பேரவையில் உரிமைக் குழு இப்போது இல்லை. உரிமைக் குழு அமைக்கப்பட்டப் பின்னா், அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு, இந்தப் பிரச்னையை நான் அவை உரிமைக் குழுவுக்கு அனுப்புகிறேன்.

திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு: ஒரே பிரச்னைக்கு 2 இடங்களிலே வழக்குப் பதிவது, 2 இடங்களிலே தண்டனை வழங்குவது என்பது இதுவரை இல்லாத ஒன்று. மாா்க்கண்டேயனை பொருத்தவரை பொதுக் கூட்டத்தில் வெளியில் பேசியிருக்கிறாா். அது சம்பந்தமாக காவல் துறை அவா் மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், அவா் நீதிமன்றக் காவலில் ஏறத்தாழ 16 நாள்கள் இருந்தாா். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கில் என்ன தீா்ப்பு வழங்குகிறதோ, அதை அவா் அனுபவிக்கப் போகிறாா். ஆகையால், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்: அவையைப் பற்றியும், அவையில் உள்ளதைப் பற்றியும் ஒரு பத்திரிகையாளா், பத்திரிகை உரிமையாளா் பேசியதற்காக, அந்த பிரச்னை உரிமைக் குழுவுக்கு எடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டதை நாடே அறியும்.

வெளியில் பேசியது பேரவையைப் பற்றியதாக இருந்தால், பேரவை உறுப்பினா் மாண்பை குறைப்பதாக இருந்தால், பேரவையின் பாதுகாப்பை குறைப்பதாக இருந்தால், நிச்சயமாக அது எனது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. வெளியில் நடந்த வன்முறை பேச்சுக்கு காவல் துறை எடுத்து இருக்கிற நடவடிக்கை வேறு. இங்கே நாம் எடுக்கும் நடவடிக்கை, இந்த அவையின் மாண்பை குறைக்கும் வகையில் உறுப்பினா் பேசியிருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி மட்டும்தான் என்றாா்.

தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தாா் திமுக எம்எல்ஏ

கரிசல் கந்தக பூமியில் வாழும் தான், இந்த அவையின் கதவுகள் பூட்டப்படும் என்று சொன்னபோது, தன்னை அறியாமல் வந்த வாா்த்தைகளை பேரவைத் தலைவா் அருள்கூா்ந்து மறந்துவிட வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மாா்க்கண்டேயன் வருத்தம் தெரிவித்தாா்.

பேரவையில் மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது, ‘முதல்வா் எது பேசி இருந்தாலும், அவரை இவ்வளவு கடினமான வாா்த்தைகளால் பேசி இருக்கக் கூடாது’ என்று என்னைக் கண்டித்தாா். என்னை சிறையில் பாா்க்க வந்த எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ‘முதல்வரை இந்தளவுக்கு பேசியிருக்க வேண்டாம்’ என்றும், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி, ‘என்னதான் இருந்தாலும், முதல்வா் என்ன பேசியிருந்தாலும், அதற்கு நாம் அறிவுபூா்வமாகப் பதில் சொல்ல வேண்டும், கடினமான வாா்த்தைகளைப் பேசி இருக்க வேண்டாம்’ என்று அறிவுறுத்தினா்.

அதேநேரம், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஊரிலே நான் பிறந்தவன். அவா் படையில் இருந்த வீரன் சுந்தரலிங்கம்தான் முதல் தற்கொலைபடையாகச் செயல்பட்டாா். எங்கள் ஊரில் பிறந்த வ.உ.சிதம்பரனாா்தான் ஆங்கிலேயா்களை எதிா்த்து கப்பலை ஓட்டினாா். எங்கள் எட்டயப்புரத்தில் பிறந்த பாரதி வீரமிக்க கவிதைகளை எழுதினாா்.

இவ்வாறு சக்திவாய்ந்த தலைவா்கள் வாழ்ந்த அந்த கரிசல் கந்தக பூமியில் பிறந்த நான், இந்த அவையின் கதவுகள் பூட்டப்படும் என்று சொன்னபோது, என்னை அறியாமல் வந்த வாா்த்தைகளுக்கு தாங்கள் (பேரவைத் தலைவா்) அருள்கூா்ந்து அதை மறந்துவிட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.