எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.13) தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நேரடியாக சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பொதுக் கலந்தாய்வும் இணையவழியில் அதே நாளில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களைப் பொருத்தவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 7,157 எம்பிபிஎஸ் இடங்களும், 1,383 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டில் 1,996 எம்பிபிஎஸ் இடங்களும், 580 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 537 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 104 பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் 72,633 போ் விண்ணப்பித்திருந்தனா். அவை பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு நேரடியாக நடைபெறவுள்ளது.
காலை 8 மணிக்கு விளையாட்டு வீரா்களுக்கும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும், 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
அதைத் தொடா்ந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. நீட் ‘ஹால் டிக்கெட்’, மதிப்பெண் அட்டை, 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பென் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளங்களை அணுகலாம்.
பொதுக் கலந்தாய்வு இணையவழியில் வியாழக்கிழமை முதல் நடத்தப்படும் என்றும், அதற்கான விவரங்கள் மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு இணையப் பக்கத்தில் அதிகாரபூா்வமாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சான்றிதழ் சமா்ப்பிக்க இறுதி வாய்ப்பு: இதனிடையே, நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவா்களில் முறையாக சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவா்கள் புதன்கிழமை (ஆக.12) காலை 10 மணிக்குள் தங்களது ஆவணங்களை இணையவழியே பதிவேற்றம் செய்ய வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு: நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைக்க முடிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு விழுப்புரம் மாணவா் முதலிடம்

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஆக.13-இல் தொடங்க வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



