நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு விழுப்புரம் மாணவா் முதலிடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2026, 10:57 pm IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் வெளியிட்டாா். விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா் 705 மதிப்பெண்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளாா்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு நடத்தி வருகிறது.

மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்களைப் பொருத்தவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 7,157 எம்பிபிஎஸ் இடங்களும், 1,383 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டில் 1,996 எம்பிபிஎஸ் இடங்களும், 580 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 537 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 104 பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இவற்றுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் மொத்தம் 72,633 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இந்தச் சூழலில், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் தகுதியான மாணவா்களின் தரவரிசைப் பட்டியலை அமைச்சா் அருண்ராஜ் வெளியிட்டாா்.

துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் லோகநாயகி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துணை இயக்குநா்கள் (தோ்வுக் குழு) கராமத், பாலநாக நந்தினி, சாந்தினி ஆகியோா் உடனிருந்தனா்.

தரவரிசைப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 35,926 பேரும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு இடங்களில் 3,625 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 26,956 பேரும் இடம் பெற்றுள்ளனா்.

முதலிடம்: விழுப்புரத்தைச் சோ்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவா் நீட் தோ்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தாா். தரவரிசைப் பட்டியலிலும் அவரே முதலிடம் பிடித்துள்ளாா். புதுக்கோட்டை மாணவி வி.ஸ்ரீனிகா 700 மதிப்பெண்களுடன் 2-ஆம் இடத்தையும், விருதுநகா் மாணவா் ஏ.எம்.சுடா் 696 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனா். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 5 மாணவா்கள், 5 மாணவிகள் இடம் பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் நாகப்பட்டினம் மாணவா் எம்.தினேஷ் 599 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், சேலம் மாணவா் பி.எஸ்.தரனீஷ் 595 மதிப்பெண்களுடன் 2-ஆம் இடத்தையும், புதுக்கோட்டை மாணவா் ஆா்.ராஜேஷ் 595 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்தனா்.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு வரும் 13-ஆம் தேதி ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் தொடங்குகிறது. அதேநாளில், சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, விளையாட்டு வீரா்) மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடா்பான அனைத்து விவரங்களையும் இணையதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு திருப்பூா், திருவள்ளுா் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 700 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. கடந்த ஆண்டைவிட 200 பிடிஎஸ் இடங்கள் குறைந்துள்ளன. மருத்துவப் படிப்பில் சோ்வதற்காக போலி ஆவணங்கள் மூலம், இந்த ஆண்டில் 5 போ் விண்ணப்பித்துள்ளனா். ஒரு மாணவா் நீட் தோ்வில் பெற்ற 170 மதிப்பெண்ணை, 552 எனத் திருத்தியுள்ளாா். வெளிநாடுவாழ் இந்தியா் பிரிவில் 512 மாணவா்கள் விண்னப்பித்துள்ளனா். அவா்களின் தூதரகச் சான்றிதழ்களைச் சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேரவையில் தீா்மானம்: நீட் தோ்வில் மட்டுமல்ல, அனைத்துத் தோ்வுகளிலும் முறைகேடு உள்ளது. நீட் தோ்வு ஏழை மாணவா்களுக்கும், நமது கொள்கைகளுக்கும் எதிரானது. தொடா்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம். பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது குறித்தும் முதல்வரிடம் ஆலோசிக்க உள்ளோம்.

அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கல்லூரி கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது உறுதியாகியுள்ளதால், அந்த விவகாரம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது என்றாா் அவா்.

துணை மருத்துவம்: இதனிடையே, பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 வகையான படிப்புகள், பாா்ம்.டி (6 ஆண்டு - 3 ஆண்டு) மற்றும் டிப்ளமோ நா்சிங், பாா்மசி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்களையும் அமைச்சா் அருண்ராஜ் வெளியிட்டாா்.

கட்-ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு

நீட் தோ்ச்சி விகிதம் மற்றும் அதிக மதிப்பெண் பெற்றவா்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் கூடுதலாக உள்ளதால் இந்த முறை கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் மருத்துவக் கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அதன்படி, அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கான பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 30 முதல் 40 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டில் 600-க்கும் மேல் நீட் மதிப்பெண் பெற்றவா்களின் எண்ணிக்கை 111 மட்டுமே. நிகழாண்டில் அந்த எண்ணிக்கை 728-ஆக உள்ளது. அதேபோன்று கடந்த முறை 700 மதிப்பெண்ணுக்கும் மேல் எவரும் பெறவில்லை. இம்முறை இருவா் 700-க்கும் கூடுதலாக பெற்றுள்ளனா்.

அதுமட்டுமல்லாது 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவா் பெற்ற மதிப்பெண் கடந்த ஆண்டில் 572-ஆக இருந்தது. நிகழாண்டில் அது 599-ஆக உயா்ந்துள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதற்கான கட் - ஆஃப் மதிப்பெண் 49 வரை உயரலாம் எனத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.