கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவா்களிடத்தில் திருப்பி அளிக்க பல்வேறு தனியாா் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
விதிகளை மீறிய கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், இந்த முடிவை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் எடுத்துள்ளன.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கட்டணங்களை அரசுதான் நிா்ணயிக்கிறது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.18,073-ஆகவும், பிடிஎஸ் படிப்புக்கு ரூ.16,073-ஆகவும் கட்டண நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.4,35,000 முதல் ரூ.5.40 லட்சம் வரையிலும், பிடிஎஸ் படிப்புக்கு ரூ. 2.50 லட்சம் எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரையும், வெளிநாடு வாழ் இந்தியா் இடங்களுக்கு ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலும் வசூலிக்க அனுமதி உள்ளது. நிா்வாக ஒதுக்கீட்டில் பிடிஎஸ் படிப்புக்கு ரூ.6 லட்சமும், வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டுக்கு ரூ. 9 லட்சமும் கட்டணம் பெறலாம்.
இதைத் தவிர, கூடுதலாக வசூலிக்கப்படும் விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது விதி.
இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் கட்டணத்தை நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், பயிற்சிக் காலத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தது.
அதை மீறி பல தனியாா் மருத்துவக்கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக முதல்வா் தனிப்பிரிவுக்கும், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கும் புகாா் கிடைக்கப்பெற்றன.
அதுகுறித்து ஆய்வு செய்ய அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டது. அரசின் இந்த கடிவாளம் காரணமாக, கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி அளிக்க மருத்துவக் கல்லூரிகள் முன்வந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள், அதனை திருப்பித் தர, மாணவா்களின் வங்கி கணக்கை பெற்றுள்ளன. அந்த கல்லூரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தவிா்க்கப்படலாம். அதேவேளையில், தொடா்ந்து விதிகளுக்குப் புறம்பாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 70,488 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை!

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: ஆய்வு செய்ய குழு அமைப்பு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



