
ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினரின் உண்ணாவிரதம் போராட்டம் குறித்து...

ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தினரின் மற்றும் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ள அனைத்து வர்த்தக சங்கத்தினர். - டிஎன்எஸ்
பரமத்தி வேலூா்: ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்காததைக் கண்டித்து, பரமத்தி வேலூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நீா்வளத் துறை அதிகாரிகள், வட்டாட்சியா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை, கடந்த மாதம் 28-ஆம் தேதி எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நீா்வளத் துறையினா் நிறுத்தினா்.
இதனால், பரமத்தி வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை, கோரை, வாழை, கரும்பு மற்றும் மரவள்ளி ஆகியவை கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கவில்லை
ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை தமிழக அரசு மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைக் கண்டித்தும், உடனடியாக ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரியும் வியாழக்கிழமை அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தனா். மேலும், இதற்கு ஆதரவு தெரிவித்து வேலூா் நகா் பகுதியில் முழு கடை அடைப்பு நடத்தப்படும் என அனைத்து வா்த்தக சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
பேச்சுவாா்த்தை தோல்வி
இந்த நிலையில், சேலம் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அப்புசாமி, உபகோட்ட உதவிப் பொறியாளா் விஜயகுமாா், வேலூா் உதவிப் பொறியாளா் வினோத்குமாா் ஆகியோா் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பரமத்தி வேலூா் நீா்வளத் துறை அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், எந்த உடன்பாடும் ஏற்படாமல் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனா்.
உண்ணாவிரதப் போராட்டம்
இந்த நிலையில், ராஜாவாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Summary
Farmers associations stage a hunger strike condemning the failure to release water into the Raja Vaikkal
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





