மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

‘சொந்த செலவிலோ, உங்கள் கட்சி செலவிலோ எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கிக்கொடுங்கள்’ - சீமான்

‘சொந்த செலவிலோ, உங்கள் கட்சி செலவிலோ எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கிக்கொடுங்கள்’ என்று சீமான் காட்டம்..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:03 pm IST

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சொந்த செலவிலோ கட்சி செலவிலோ எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கிக்கொடுங்கள் என்று சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார், உதவியாளர் ஊதியத்துக்காக ரூ.25,000, எரிபொருள் செலவுத் தொகையாக ரூ.75,000 வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ச.ஜோசப் விஜய் நேற்று (ஆக. 19) அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு ஆளுங்கட்சி தரப்பில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்த நிலையில், எதிர்க்கட்சியினரும் பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்யை விமர்சித்து அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை அடுக்கி பதிவு வெளிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து எதற்கு?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மகிழுந்து இல்லாத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 190 சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 லட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உள்பட, மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள்.

மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்? அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும் முறையா? விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது.

அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா? மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?

தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?

அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டப்பேரவைம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டப்பேரவைத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா?

விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதல்வரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Seeman has emphatically stated that cars should be purchased for MLAs, either at their own expense or at the party's expense.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.