/

மகாராஷ்டிரம் திரும்பினார் அபிஜீத் தீப்கே! சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் அபிஜீத் தீப்கேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

சத்ரபதி சம்பாஜி நகரில் அபிஜீத் தீப்கேவுக்கு உற்சாக வரவேற்பு - Instagram

Updated On :29 ஜூலை 2026, 9:26 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு அவரது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பெங்களூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் இறுதியாக தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.

கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் உடன் இணைந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது.

இதையடுத்து, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தின் விளைவாக, கடந்த ஜூலை 25 அன்று தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.

இந்தப் போராட்டத்திற்காக, சுமார் 1 மாதத்துக்கும் மேலாக ஜந்தர் மந்தரில் தங்கியிருந்த அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனால், போராட்டக் களத்திலேயே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தனது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகருக்கு அபிஜீத் தீப்கே இன்று (ஜூலை 29) சென்றடைந்தார். அங்கு அவருக்கு ஏராளமான இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி அகியோரின் சிலைகளுக்கு அபிஜீத் தீப்கே மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“36 நாள்கள் கழித்து வீடு திரும்பியது நன்றாக இருக்கிறது. என் வீட்டில் நிம்மதியாகத் தூங்கவும், என்னால் அம்மா சமைத்த உணவை உண்ணவும் முடியும். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் கூறியுள்ளார்.

Summary

Abhijit Dipke, founder of the Cjp, has been accorded an enthusiastic welcome in his hometown of Chhatrapati Sambhajinagar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.