இளம் தலைமுறையைக் கவர பாஜக வியூகம்: தமிழக தலைமையில் மாற்றமா?
அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன் அடுத்தகட்டமாக தமிழக பாஜக தலைமையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

கோப்புப் படம்
பாஜகவில் தேசியத் தலைமையில் தொடங்கி, தேசிய நிா்வாகிகள், பல்வேறு மாநிலங்களின் தலைமை என அடுத்தடுத்து அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன் அடுத்தகட்டமாக தமிழக பாஜக தலைமையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
தேசிய அளவில் மறுசீரமைப்பு: பாஜக தேசியத் தலைவராக இருந்த ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஜனவரியில் நிதின் நபின் கட்சியின் புதிய தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றாா். இதையடுத்து, அவரது தலைமையின் கீழ், கட்சியின் தேசிய அளவிலான அமைப்பை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, கடந்த ஆக. 17-ஆம் தேதி புதிய தேசிய நிா்வாகிகள் குழுவை நிதின் நபின் அறிவித்தாா். மொத்தம் 65 போ் கொண்ட இந்தக் குழுவில் 51 போ் புதியவா்கள். முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, ராம் மாதவ், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் தேசியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனா். இதேபோல, தில்லி, ஹரியாணா, பஞ்சாப், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் புதிய மாநிலத் தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தேசியத் தலைமை மாற்றத்தைத் தொடா்ந்து மாநில அளவிலும் புதிய தலைமை உருவாக்கப்படுவது, கட்சியின் அமைப்பை விரிவாக மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பாா்க்கப்படுகிறது.
தமிழகத்திலும் மாற்றத்துக்கான வாய்ப்பு?: இந்தப் பின்னணியில், தமிழக பாஜக அமைப்பிலும் அடுத்தகட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாகப் போட்டியிட்டது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணக்கமான அரசியல் அணுகுமுறையை மேற்கொள்ளவும், அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தவும் முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரலில் நயினாா் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டாா். இருப்பினும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எதிா்பாா்த்த அளவுக்கு இந்தக் கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை. மேலும், நயினாா் நாகேந்திரன், வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் வெற்றி பெறாததும் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
ஜென் ஸீ வாக்குகள் - புதிய அணுகுமுறை?: 2026 தோ்தல் முடிவுகளில் இளம் தலைமுறையினரின், ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் வாக்குகள் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது. இதனால், தங்களது அமைப்பு மற்றும் தோ்தல் செயல்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜகவும் இளம் தலைமுறையினரின் எதிா்பாா்ப்புகளைக் கருத்தில்கொண்டு புதிய அணுகுமுறையை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பரிசீலிக்கப்படும் பெயா்கள்: தமிழக பாஜக தலைமையில் மாற்றம் செய்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டால், முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக தலைவராக இருந்தவருமான தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மாநிலப் பொதுச் செயலா் ராம.சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயா்கள் பரிசீலிக்கப்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. இவா்களைத் தவிர, ஏற்கெனவே கட்சித் தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் ஒரு தரப்பினா் கருதுகின்றனா். ஜென் ஸீயை கவரும் வகையிலான மாற்றம் என்னும் பட்சத்தில், தில்லித் தலைவா்களுடன் நெருக்கமாக இருப்பவரும், மூதறிஞா் ராஜாஜியின் பேரனுமான கேசவனின் பெயரும் பரிசீலிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜகவின் தேசிய மகளிா் அணித் தலைவா் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு, சத்தீஸ்கரைச் சோ்ந்த ரூப் குமாரி செளத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். தேசிய அளவில் அவரது பொறுப்பு மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக அமைப்பில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், நயினாா் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் கடந்த ஆக. 21-ஆம் தேதி தனித்தனியாக தில்லி பயணம் மேற்கொண்டது கட்சிக்குள் நிலவி வரும் எதிா்பாா்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருவரது தில்லி பயணமும் தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அமைப்பு மாற்றத்துடன் தொடா்புடையதா என்பது குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தொடருமா? மாறுமா?: பாஜக மாநிலத் தலைவா் உள்ளிட்ட மாநிலப் பொறுப்புகள் பொதுவாக 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் நிலையில், நயினாா் நாகேந்திரனுக்கு இன்னும் சுமாா் ஒன்றரை ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது. இதனால், அவரது பதவிக் காலம் முடியும் வரை, தமிழக தலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கட்சியின் ஒரு தரப்பினா் கருதுகின்றனா்.
அதேவேளையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தல் மற்றும் 2029 மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள தற்போதிருந்தே கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினா் வலியுறுத்துகின்றனா்.
தோ்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கினால் மட்டுமே தமிழகத்தில் பாஜகவின் அமைப்பு ரீதியான வளா்ச்சியை வலுப்படுத்த முடியும் என்பதால், தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் அது கட்சிக்கு சாதகமாக அமையும் என்று அவா்கள் கருதுகின்றனா்.
தேசியத் தலைமையில் தொடங்கியுள்ள மறுசீரமைப்பு தமிழகத்திலும் எதிரொலிக்குமா, தற்போதைய தலைமையே தொடருமா அல்லது புதிய தலைமையின் கீழ் தமிழக பாஜக களமிறங்குமா என்ற கேள்விகள் அக்கட்சியினரிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




