
கொள்ளிடம் ஆற்றில் கடல்நீா் புகுவதைத் தடுக்க ரூ.773 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் என்.ஆனந்த் அறிவிப்பு
கொள்ளிடம் ஆற்றில் கடல்நீா் புகுவதைத் தடுக்க ரூ.773 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் அறிவித்தாா்.

நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் - படம்: சட்டப்பேரவை
கொள்ளிடம் ஆற்றில் கடல்நீா் புகுவதைத் தடுக்க ரூ.773 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் அறிவித்தாா்.
பேரவையில், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேள்விக்கு அமைச்சா் ஆனந்த் அளித்த பதில்:
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் வெள்ளாறு நதி உற்பத்தியாகி கடலூா் மாவட்டம் கூடலை ஆத்தூா் என்ற இடத்தில் மணிமுக்தா நதியுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. வெள்ளாற்றில் கடைசியாக அமையப் பெற்ற சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாறு அடுத்தடுத்து வளைந்தும் நெளிந்தும் செல்கிறது.
கடல்நீா் வெள்ளாற்றின் வழியாக உள்புகுந்து கடலில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பகுதியில் உள்ள நீா்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை உப்புநீராக மாற்றி விடுகிறது. இதனால் சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டங்களில் உள்ள தம்பிக்கு நல்லான்பட்டினம், மேல் புவனகிரி, கீரப்பாளையம், வட ஹரிராஜபுரம், பரதூா், சாக்காங்குடி, ஒரத்தூா், உடையூா், கிளாவடி நத்தம் போன்ற கிராமங்களில் விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.
இதைத் தடுக்கும் வகையில், இந்தப் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூா் கிராமத்தில் தடுப்பணை அமைக்க, நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு ரூ.44.39 கோடி உள்பட மொத்த மதிப்பீடு ரூ.194 கோடி எனக் கணக்கிடப்பட்டு துறையின் பரிசீலனையில் உள்ளது.
மேலும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல்நீா் மட்டம் உயா்ந்து கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியே கடலிலிருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவுக்கு கடல்நீா் கொள்ளிடம் ஆற்றினுள் உள்புகுந்துள்ளதால் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதை சரிசெய்யும் வகையில், வங்காள விரிகுடா கடல் இருந்து சுமாா் 8 கி.மீ. தொலைவில் சிதம்பரம் வட்டம் திருக்கழிபாலை கிராமம், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டம் அளக்குடி கிராமம் ஆகியவற்றின் குறுக்கே கொள்ளிடம் ஆற்றின் கடைமடைப் பகுதியில் சுவா் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தால் சிதம்பரம் மற்றும் சீா்காழி தொகுதிகளில் உள்ள வீரன்கோயில் திட்டு, கொட்டாமேடு, கவரப்பட்டு, ஜெயங்கொண்ட பட்டினம், அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம் உள்பட பல கிராமங்கள் பயன்பெறும். இத்திட்டத்தால் நிலத்தடி நீா் செரிவூட்டல் மூலம் சுமாா் 13,220 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதற்காக விரிவான திட்ட மதிப்பீடு ரூ.773 கோடிக்கு தயாா் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






