
நேபாள வெள்ளம்: 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்! மீதி 100 பேர்?
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பத்திரமாக இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியது குறித்து...
செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் - விடியோ க்ளிப்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பத்திரமாக இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, "கடந்த 3 நாள்களாக மாநில அரசுடன் மத்திய அரசும் நேபாள அரசும் சேர்ந்து, இரு நாட்டு தூதர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. மீட்புப் பணிகள் தொடரும்.
இந்த மீட்புப் பணிகளில் சிறு தொய்வுமில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அயலக தமிழர்கள் நலன் துறை அமைச்சர் தென்னரசு இங்கேயே முகாமிடுகிறார்.
வெள்ளிக்கிழமை இரவு வரையில் 21 பேர் பத்திரமாக தில்லிக்கு அழைத்து வரப்பட்டு, சென்னைக்கு அனுப்பட்டுள்ளனர். அதேபோல், ஆன்மிக சுற்றுலா சென்றவர்களும் எங்கெல்லாம் விமானங்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரையில் 319 பேர் நேபாளத்துக்கு சென்றதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இருப்பினும், விமான நேரங்களின் அடிப்படையில் அவர்களின் வருகை முன்பின்னாக இருக்கும். மீதமுள்ளவர்களின் நிலையை அறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சம்பவங்களில் 20 நாள்கள் கழித்து மீண்டு வந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். இந்த வெள்ளப் பெருக்கு விவகாரத்தில் பல நாடுகளும் சேர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இங்கிருந்து ஒருவர்கூட தவறவிட்டுவிடக் கூடாது என்பதுதான் முதல்வர் விஜய்யின் இலக்கு. அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவதுதான் நம்முடைய ஒரே இலக்கு.
வெள்ளம் ஏற்பட்ட சம்பவ இடத்திலிருந்து பல கி.மீ. தொலைவு வரையில் அடையாளம் தெரியாத பல சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துரதிருஷ்டவசமாக அவர்களில் நம் மாநிலத்தோரும் இருந்து விடுவார்களோ என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26-ல் திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தில் உள்ள போடே கோஷி நதி வழியாக மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது. மலைப் பகுதியிலிருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்குச் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோரத் தாண்டவம் பல கிராமங்கள் உருக்குலைந்தன.
நேபாள பெரு வெள்ளத்தின்போது, தமிழ்நாட்டிலிருந்து நேபாளம் சென்று, அங்கு சிக்கிக் கொண்டதாக மேலும் பலரின் தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.
Summary
Of the 319 Tamils stranded in the Nepal floods, 219 are safe, says Minister Rajmohan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





