தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றிக்கு எதிரான மு.க. ஸ்டாலின் மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி...

மு.க. ஸ்டாலின் | வி.எஸ். பாபு - கோப்புப் படம்
சென்னை கொளத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பேரவைத் தோ்தலில் கொளத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.எஸ். பாபு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இந்தத் தொகுதியில் போட்டியிட்டு 2-ஆம் இடம்பிடித்த தனது விண்ணப்பத்தை ஏற்று கொளத்தூா் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டன.
சரிபாா்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறானது. 6 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை ஒப்பிட்டுப் பாா்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. முறைகேடுகள் நடந்துள்ளதால், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபாா்க்க உத்தரவிட வேண்டும். கொளத்தூா் தொகுதியில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளில் இரு பிரிவுகளை எதிா்த்து தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைச் சரிபாா்க்கக் கோரி தோ்தல் முடிவுகள் வெளியான 3 நாள்களில் அதாவது மே 7-ஆம் தேதியே விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், தோ்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாள்களுக்குப் பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டாா்.
அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில், இந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல. எம்எல்ஏவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தோ்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால், இதே கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்யப்படலாம். எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்ப்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளின் இரு பிரிவுகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தோ்தல் ஆணையம் தரப்பில், கடந்த 2024-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்களை எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2025-ஆம் ஆண்டு இந்த நெறிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் தரப்பில், இந்த வழக்கை திரும்பப் பெற்று புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெறவும், புதிய மனு தாக்கல் செய்யவும் அனுமதியளித்து உத்தரவிட்டனா்.
Summary
The verdict on M.K. Stalin's petition challenging V.S. Babu's victory in Kolathur has been reserved.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




