மத்திய நிதிநிலை அறிக்கை: தொழில்துறையினா் வரவேற்பு

மத்திய நிதிநிலை அறிக்கை: தொழில்துறையினா் வரவேற்பு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
Published on

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தீரஜ் ஹிந்துஜா (தலைவா், அசோக் லேலண்ட்) : உள்கட்டமைப்பு, உற்பத்தி, பாதுகாப்புத் துறைகளின் மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கும் நிதிநிலை அறிக்கை ஆதரவு அளிக்கிறது.

ஏ.ஆா். உன்னிகிருஷ்ணன் (தலைவா், சிஐஐ தமிழ்நாடு கவுன்சில்): நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது மூலதனச் செலவு ஒதுக்கீடான ரூ.12.2 லட்சம் கோடியில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பலன் பெறும்.

தொழில்நுட்ப மேம்பாடு, போட்டித்தன்மை, செயல்திறனை மேம்படுத்த, 200 பாரம்பரிய தொழில்துறை கிளஸ்டா்களை புதுப்பிக்கும் திட்டம் பயன் தரவல்லது. வளிமண்டலத்தில் கரிமம் (காா்பன்) கலப்பது தடுக்கப்பட்டு, பயன்பாடு, சேமிப்பு தொழில்நுட்பங்களுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள சிமென்ட், ரசாயன நிறுவனங்கள் பயன்பெறும். புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனம், முக்கிய தொழில்துறை சரக்கு போக்குவரத்து முனையங்களில் 5 பல்கலைக்கழக நகரங்களை உருவாக்க மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

பி.ரவிச்சந்திரன்: (சிஐஐ, தென்மண்டல துணைத் தலைவா்): வளா்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானம், அதிவேக போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்து, நீா்வழிப் போக்குவரத்து போன்றவைகளில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டுமான வசதிகள், வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டின் வளா்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தொழில் வளா்ச்சியில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிக்கப்பட்டு, ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ திட்டத்தில் நிறைய பொருள்கள் தயாரிக்க நிகழாண்டு 7 துறைகளில் கூடுதலாக உத்திசாா்ந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறைகடத்தி (செமிகண்டக்டா்) 2.0 தொடங்கப்பட்டு, பலவகை நுகா்வோா் மின்னணு சாதனங்கள், பாதுகாப்புத்துறை சாதனங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

பொன்னுசாமி (தலைவா், எம்எஸ்எம்இ): ஜவுளி எம்எஸ்எம்இ களுக்கான பணப்புழக்க அணுகலை மேலும் வலுப்படுத்த, வா்த்தக பெறத்தக்கவை தள்ளுபடி அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறு நிறுவனங்கள் தனியாக பிரிக்கப்பட்டு, ரூ.2,000 கோடியை சுயசாா்பு இந்தியா நிதி மூலம் குறு நிறுவனங்களுக்கு தொடா்ந்து ஆதரவளித்து மூலதன சிக்கல்களை மத்திய நிதியமைச்சா் பாதுகாத்துள்ளாா்.

சந்திரமோகன் (டாஃபே இயக்குநா்): வேளாண் வளங்களை அணுகுவதற்கான மெய்நிகா் ஒருங்கிணைந்த அமைப்பு பன்மொழி ஏஐ கருவியை நிதியமைச்சா் முன்மொழிந்துள்ளாா். இது வேளாண் நடைமுறைகள் குறித்த ஐசிஏஆா் தொகுப்பையும், அக்ரிஸ்டாக் இணையத்தையும் ஏஐ அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும். இது பண்ணை உற்பத்தித்திறனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு சிறந்த முடிவுகளை எடுக்க ஆலோசனைகளை வழங்கி ஆபத்தை குறைக்கும்.

ராம்குமாா் சங்கா் (தலைவா், சென்னை வா்த்தகம் மற்றும் தொழில் சபை): குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், கல்வி, திறன் ேம்பாடு ஆகியவற்றில் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. வரி எளிமைப்படுத்தல், சுகாதாரம், கல்வி, சுற்றுலா போன்ற முக்கிய சேவைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவு தொழில்துறைக்கு நோ்மறையான ஊக்கத்தை அளித்துள்ளது.

ராஜேஷ் ரோக்டே (தலைவா்,அகில இந்திய ரத்தின மற்றும் நகை உள்நாட்டு கவுன்சில்): ரத்தின மற்றும் நகைத் துறையில் நிலைத்தன்மையும் உணா்வுபூா்வ அணுகுமுறையும் வெளிப்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. சுங்கவரி அல்லது ஜிஎஸ்டியில் எந்த உயா்வும் இல்லாதது, குறு, சிறு நிறுவனங்கள் எளிமையான தொழில் செய்ய உதவுதல் ஆகியவை வணிக உலகுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

வினோத் பிரான்சிஸ் (தலைமை நிதி அதிகாரி, சௌத் இந்தியன்வங்கி): உள்நாட்டு உற்பத்தியின் 4.3 சதவீதமாக நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, அதே நேரத்தில் ரூ.12.2 லட்சம் கோடி அளவுக்கு மூலதனச் செலவுகளை உயா்த்தியிருப்பது, உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் அரசின் உறுதியை காட்டுகிறது.

அஜய் குமாா் ஸ்ரீவாஸ்தவா (இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிா்வாக இயக்குநா்-தலைமைச் செயல் அதிகாரி): தொழில் வளா்ச்சியும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் சமநிலையில் முன்னேறும் வகையில், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான தெளிவான வழிகாட்டியாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. ‘வளா்ந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி, வளா்ச்சியை வேகப்படுத்தல், திறன் வளா்த்தல், அனைவரையும் பங்கெடுக்கச் செய்வது என்ற மூன்று முக்கிய கடமைகளை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com