தமிழ்நாடு - சட்டப்பேரவைத் தேர்தல்கள் - இதுவரை...

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பற்றி...
பேரவைக் கட்டடம்...
பேரவைக் கட்டடம்...EPS
Updated on
7 min read

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற பேரவைத் தேர்தல்களைப் பற்றி பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக தேர்தல் நடத்தப்பட்டு 1952 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. அப்போது ஆந்திரம், கேரளம், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளுடன் தமிழகம் மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர், 1953 ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆந்திர மாநிலம் தனியாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்டு வெவ்வேறாகக் காணப்பட்டது. 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகே சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 என நிலைபெற்றது.

1952 - முதல் சட்டப்பேரவைத் தேர்தல்

1952 ஆம் ஆண்டில் தமிழகத்தில் (அப்போதைய மெட்ராஸ் மாகாணம்) முதல்முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 152 இடங்களில் வெற்றி பெற்றது. சி. ராஜகோபாலச்சாரி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 393 பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

314 நாள்கள் பேரவை நடந்தது. 9 முறை கூட்டத்தொடர்கள் நடைபெற்றன. இரவு நேரத்தில் மட்டும் 12 முறை கூட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே, முதல்வர் ராஜகோபாலச்சாரி, உடல்நலக் குறைவு காரணமாக 1954 ஆம் ஆண்டு ஏப். 13 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், காமராஜர் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது.

இந்த அமைச்சரவையில் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், ஏ.பி. ஷெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலு, சண்முக ராஜேஸ்வர சேதுபதி, பரமேஸ்வரன், ராமசாமி படையாச்சி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய கட்சியான திமுக, இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. நாடு குடியரசான பின்னர் நடைபெறும் முதல் தேர்தலில் சில காரணங்களால், திமுக போட்டியிடாது என்றும், 2-வது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என்றும் அண்ணா அறிவித்திருந்தார்.

1957 - முதல் சட்டப்பேரவைத் தேர்தல்

இந்தத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் 151 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களையும், பிரஜா சோசலிஸ்ட் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் 112 இடங்களில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைந்தது.

இரண்டாவது சட்டப்பேரவைத் தேர்தலில் 213 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாவது முறையாக முதல்வரான காமராஜர் அமைச்சரவையில் பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், கக்கன், எம்.ஏ. மாணிக்கவேலு, ஆர். வெங்கடராமன், ராமையா, லூர்து சைமன் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றனர்.

1962-ல் முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர், மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டதால் தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 305 நாள்கள் நடைபெற்றன.

1967 - மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தல்

மூன்றாவது சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், 139 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, காமராஜர் தலைமையில் கடந்த 1962-ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில், திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணா தோல்வியடைந்தார். சுதந்திரா கட்சி 94 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த முறை சட்டப் பேரவையில் 211 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த ஐந்து ஆண்டு காலத்தில், பேரவைக் கூட்டத் தொடரானது 256 நாள்கள் நடைபெற்றது.

மூன்றாவது முறையாக காமராஜ் முதல்வராகப் பதவியேற்றார். எம். பக்தவத்சலம், ஆர். வெங்கடராமன், கக்கன், வி. ராமையா, ஜோதி, வெங்கடாசலம், பூவராகவன், எஸ்.எம்.ஏ. மஜீத், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

1967 - நாலாவது சட்டப்பேரவை

நாலாவது சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் 137 இடங்களை கைப்பற்றி சி.என். அண்ணாதுரை தலைமையில் திமுக முதல்முறையாக ஆட்சி அமைத்தது. இந்த அமைச்சரவையில், ஆர். நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, மதியழகன், ஏ. கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, செ. மாதவன், சாதிக் பாட்ஷா, முத்துசாமி உள்ளிட்டோர் அமைச்சர்களாக இருந்தனர்.

1967 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு ஜன. 2 ஆம் தேதி வரையில், 199 நாள்கள் சட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது. பேரவையில் 244 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 1969 ஆம் ஆண்டு பிப். 5 ஆம் தேதி அண்ணா காலமானதைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக செயல்பட்டார்.

இதன் பின்னர், ஒரே வாரத்தில் மு. கருணாநிதி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்த அமைச்சரவையில் என்.வி. நடராஜன், கா. வேழவேந்தன், ஓ.பி. ராமன், சி.பா. ஆதித்தனார் உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

1971 - ஐந்தாவது சட்டப்பேரவை

ஐந்தாவது சட்டப் பேரவைக்கு 1971-ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. பேரவைக்கு 234 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 184 உறுப்பினர்களைக் கொண்டு தனிப் பெரும்பான்மையுடன் திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்திய தேசிய காங்கிரஸ் 15 தொகுதிகளையும், சுதந்திரா கட்சி 6 தொகுதிகளையும், பார்வர்டு பிளாக் 7 தொகுதிகளையும் கைப்பற்றின.

கருணாநிதி தலைமையில் அமைந்த இந்த அமைச்சரவையில், இரா. நெடுஞ்செழியன், சி.பா. ஆதித்தனார், க. அன்பழகன், என்.வி. நடராஜன், சத்தியவாணிமுத்து, ப.உ. சண்முகம், செ. மாதவன், சாதிக் பாட்ஷா, அன்பில் தர்மலிங்கம், ஓ.பி. ராமன், எஸ். ராமச்சந்திரன், மு. கண்ணப்பன், மன்னை பி. நாராயணசாமி, சி.வி.எம். அண்ணாமலை, ராஜாராம், என். ராஜாங்கம் உள்ளிட்டோர் அமைச்சர்களாக இருந்தனர்.

சட்டப் பேரவை கூட்டத் தொடர் 326 நாள்கள் நடைபெற்றது. அதன் பின்னர், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஜன. 31ஆம் தேதி முதல் 1977 ஜூன் 30 ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1977 - ஆறாவது சட்டப்பேரவை

ஆறாவது சட்டப்பேரவை 1977 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில், நாஞ்சில் கி. மனோகரன், எஸ். ராமச்சந்திரன், ஜி.ஆர். எட்மண்ட், இராம. வீரப்பன், அரங்கநாயகம், கா. காளிமுத்து. இராகவானந்தம், சி. பொன்னையன், குழந்தைவேலு, பி.டி. சரஸ்வதி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இந்தத் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான திமுக 48 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 27 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 12 இடங்களிலும், ஜனதா கட்சி 10, இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆறாவது சட்ட பேரவை கூட்டத் தொடர் 1977 ஜூலை 4 முதல் 1980 ஆம் ஆண்டு பிப். 13 ஆம் தேதி வரையில் 180 நாள்கள் நடைபெற்றது.

1980 - ஏழாவது சட்டப்பேரவை

ஏழாவது சட்டப் பேரவையானது 1980 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் 129 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. திமுக 37 இடங்களையும் இந்திய தேசிய காங்கிரஸ் 31 இடங்களையும், ஜனதா கட்சி 2 இடங்களையும், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும், ப. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வரான எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில், இரா. நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், கே.ஏ. கிருஷ்ணசாமி, எஸ்.டி. சோமசுந்தரம் இராம. வீரப்பன். அரங்கநாயகம், எச்.வி. ஹண்டே, எஸ். திருநாவுக்கரசு உள்ளிட்ட 27 பேர் இடம்பெற்றிருந்தனர். 1980 ஆம் ஆண்டு ஜூன் 19 முதல் 1984 ஆம் ஆண்டு அக். 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 302 நாள்கள் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது.

1984 - எட்டாவது சட்டப் பேரவை

எட்டாவது சட்டப் பேரவையானது, 1985-ஆம் ஆண்டு பிப். 10 ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், அதிமுக 132 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாக மீண்டும் முதல்வரானார்.

திமுக 24 இடங்களையும், இந்திய தேசிய காங்கிரஸ் 61 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது. திமுகவில் அமைச்சராக இருந்த ப.உ. சண்முகம் அதிமுகவில் இணைந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், இரா. நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், கே.ஏ. கிருஷ்ணசாமி. இராம. வீரப்பன், அரங்க நாயகம், எச்.வி. ஹண்டே என 25 பேர் இடம்பெற்றனர். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 1985 ஆம் ஆண்டு பிப். 25 முதல் 1988 ஆம் ஆண்டு ஜன. 28 வரை 179 நாள்கள் நடைபெற்றது.

1987 ஆம் ஆண்டில் முதல்வர் எம்.ஜி.ஆர். காலமானதைத் தொடர்ந்து அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. அதில், இராம. வீரப்பன், ப.உ. சண்முகம், சி. பொன்னையன், சு. முத்துசாமி, வி.வி. சுவாமிநாதன், டி.ராமசாமி, ஏ. அருணாசலம் ஆகியோர் இடம்பெற்றனர்.

1989 - ஒன்பதாவது சட்டப்பேரவை

1989 ஜன. 27 ஆம் தேதி ஒன்பதாவது சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சுமார் 14 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதாவின் தலைமையில் மற்றொரு அணியும் தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்தது.

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 27 தொகுதிகளையும், ஜானகி அணி 2 இடங்களையும் வென்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 26 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் 15 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களையும் வென்றது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், க. அன்பழகன், எஸ்.ஜே. சாதிக் பாட்ஷா, நாஞ்சில் மனோகரன், கே.பி. கந்தசாமி, கோ.சி. மணி, ஆற்காடு வீராசாமி, கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்ட 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 1989 பிப். 6 ஆம் தேதி முதல், 1991 ஆம் ஆண்டு ஜன. 25 ஆம் தேதி வரையில் 107 நாள்கள் சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது.

1991 - பத்தாவது சட்டப் பேரவை

பத்தாவது சட்டப்பேரவையானது 1991 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தப் பேரவைக்கு நடந்த தேர்தலில் அதிமுக 164 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. இந்திய தேசிய காங்கிரஸ் 60 இடங்களையும், பாமக ஒரு இடத்தையும் கைப்பற்றின. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சி அமைத்த திமுக, அதற்கடுத்த தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒன்றிணைந்த அதிமுகவின் பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றார். அவரின் தலைமையிலான அமைச்சரவையில் இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. கிருஷ்ணசாமி, இரா. வீரப்பன், அரங்கநாயகம், கே. ஏ. செங்கோட்டையன், மதுசூதனன். கண்ணப்பன், செல்வகணபதி உள்ளிட்ட 34 பேர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர்.

1991 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 1996 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வரை பேரவைக் கூட்டத்தொடர் 224 நாள்கள் நடைபெற்றது.

1996 - பதினோறாவது பேரவை

கடந்த 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த திமுக, பதினோறாவது சட்டப் பேரவைத் தேர்தலில் ‘கம்-பேக்’ கொடுத்தது. திமுக 173 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.

இந்தத் தேர்தலில், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் போட்டியிட்டு அதில், 39 இடங்களை கைப்பற்றியது. அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தலா 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாலாவது முறையாக முதல்வரான மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, நாஞ்சில் மனோகரன், துரைமுருகன், பொன்முடி, ஆலடி அருணா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என். நேரு உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். சட்டப் பேரவையானது, 1996 ஆம் ஆண்டு 2001-ஆம் ஆண்டு ஜனவரி வரையில் 360 நாள்கள் நடைபெற்றது.

2001 - பன்னிரண்டாவது சட்டப் பேரவை

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 5-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 132 இடங்களுடன் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில், திமுக 31 இடங்களையும், பாஜக 4 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் 6 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாமக 20, தமிழ் மாநில காங்கிரஸ் 23 இடங்களையும், முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசு தலைமையிலான எம்.ஜி.ஆர் - அண்ணா திமுக 2 இடங்களையும் கைப்பற்றியது.

சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக 2001 ஆம் ஆண்டு செப். 21 ஆம் தேதி முதல்வர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதா பதவி விலகினார். இதனால், வருவாய்த் துறை அமைச்சராக இருந்த, ஓ. பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். 2002 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி, மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

சட்டப் பேரவை கூட்டத் தொடரானது, 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கி 2006 ஜனவரி 20 ஆம் தேதி வரை 300 நாள்கள் வரை நடைபெற்றது.

2006 - பதிமூன்றாவது சட்டப் பேரவை

பதிமூன்றாவது சட்டப் பேரவையானது. 2006 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அமைக்கப்பட்டது. பேரவைக்கு நடந்த தேர்தலில் 96 இடங்களை திமுகவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளையும், அதிமுக 61 இடங்களையும், மதிமுக 6 தொகுதிகளையும், பாமக 18 தொகுதிகளையும் கைப்பற்றியது. புதிதாக தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் திமுக 5 வது முறையாக ஆட்சி அமைத்தது. 5 வது முறையாக முதல்வரான கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் க. அன்பழகன், மு.க. ஸ்டாலின் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக இடம்பெற்றனர். அதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் துணை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 - பதினான்காவது சட்டப் பேரவை

2011 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி அமைக்கப்பட்ட பதினான்காவது சட்டப் பேரவைக்கு முன்னாதாக, நடைபெற்ற தேர்தலில் அதிமுக 150 இடங்களையும், தேமுதிக 29 இடங்களையும் கைப்பற்றின. மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி 6-வது முறையாக அமைத்தது. மூன்றாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. ஆளும் கட்சியான திமுக வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரானது 2011 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி தொடங்கி, 2016-ஆம் ஆண்டு மார்ச் 17 வரை நடந்தது. சுமார் 300 நாள்கள் வரை கூட்டத் தொடர் நடைபெற்றது.

மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் 10 சதவிகித இடங்களைப் பெறும் கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து வழங்கப்படும். அதனடிப்படையில், 24-க்கும் மேற்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது.

பின்னர், தேமுதிகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ-க்கள், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, தங்களது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால், தேமுதிக உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்து, சட்டப் பேரவையின் கடைசி காலத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் தேமுதிக இழக்க நேரிட்டது.

2016 - பதினைந்தாவது பேரவை

பதினைந்தாவது பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில், பெரிய கூட்டணிகள் எதுவும் இல்லாமல் சிறிய கூட்டணிக் கட்சிகளுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டது அதிமுக. 136 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா 4 வது முறையாக மீண்டும் முதல்வரானார். எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனையைப் படைத்தார் ஜெயலலிதா.

கடந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெறாத திமுக, பேரவை வரலாற்றில் இல்லாத வகையில், 98 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பலத்துடன் கூடிய எதிர்க்கட்சியாக உருவானது. மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு டிச.5 ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைந்தது. பின்னர், சில மாதங்களில் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்ததால் முதல் முறையாக 2017 பிப். 16 ஆம் தேதி முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்றார்.

பதினைந்தாவது சட்டப்பேரவை 2016 ஆம் ஆண்டு மே 16 முதல் 2021 ஆம் ஆண்டு மே 6 வரை 183 நாள்கள் நடைபெற்றது.

2021 - பதினாறாவது பேரவை

தமிழக அரசியலில் நீண்ட நெடிய வரலாற்றில் இரு முக்கிய தலைவர்களான அதிமுகவின் பொதுச் செயலர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பேரவைத் தேர்தல் இது.

ஆளுங்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜகவுடன் கைகோத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக மற்றும் பல கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை திமுக தலைமை வகித்தது.

புதுவரவான நடிகர் கமலஹாசனில் மக்கள் நீதி மய்யமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது திமுகவுக்கு 133, அதிமுகவுக்கு 62, காங்கிரஸுக்கு 17, பாமக 5, பாஜக 4, விசிக 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2 உறுப்பினர்கள் உள்ளனர். 

திமுக 188 இடங்களில் போட்டியிட்டு 133 தொகுதிகளிலும், அதிமுக 191 இடங்களில் போட்டியிட்டு 66 இடங்களிலும், காங்கிரஸ் 25-ல் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றன. 183 தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 171 இடங்களில் போட்டியிட்டும் அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க முடிந்ததே தவிர ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 60 இடங்களில் போட்டிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை.

திமுக தனிப் பெரும்பான்மையுடன் முறையாக ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்முறையாக முதல்வாராகத் தேர்வானார். 66 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2026-க்கான மாநிலத்தின் பதினேழாவது சட்டப்பேரவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது. யார் வெல்லப் போகிறார்கள்? யார் முதல்வராகப் பொறுப்பேற்பார்? பார்க்கலாம்...

Summary

With the assembly elections in Tamil Nadu due in a couple of months, let's take a look at the assembly elections held so far.

பேரவைக் கட்டடம்...
மெட்ராஸ் மாகாண முதல் சட்டமன்றம் (1952 - 1957): ஏராளமான முன்னுதாரணங்களின் களம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com