நீலகிரி, கொடைக்கானலில் இன்று உறைபனிக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை(ஜன.6) அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவு மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையையொட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை(ஜன.6) முதல் ஜன.11தமிழகம் மற்றும் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் செவ்வாய்க்கிழமை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

