தமிழகத்தில் 1,476 உறுப்புகளை மாற்றி பொருத்தி மறுவாழ்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மூளைச் சாவு அடைந்த 266 பேரிடம் இருந்து பெறப்பட்ட 1,476 உறுப்புகள் வெற்றிகரமாக ஆயிரக்கணக்கானோருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மூளைச் சாவு அடைந்த 266 பேரிடம் இருந்து பெறப்பட்ட 1,476 உறுப்புகள் வெற்றிகரமாக ஆயிரக்கணக்கானோருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப். 23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். இதனை பின்தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2024-இல் 268 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,500 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 266 பேரிடமிருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 1,476 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. உறுப்புதானம் அளித்தவா்களில் விபத்தில் சிக்கி 186 பேரும், விபத்தில்லாத வகையில் 80 பேரும் என மொத்தம், 266 போ் மூளைச்சாவு அடைந்தவா்கள். அவா்களில் 211 போ் ஆண்கள், 55 போ் பெண்கள்.

மொத்தம் 450 சிறுநீரகங்களும், 220 கல்லீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

ஒருவா் மூளைச் சாவு அடையும்போது அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினா்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத் தொடா்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த வேண்டும்.

இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன. அவற்றை பல அரசு மருத்துவமனைகள் திறம்பட கையாண்டு சாத்தியமாக்கியுள்ளன என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி....

உறுப்புகள் – எண்ணிக்கை

சிறுநீரகம் – 450

கல்லீரல் – 220

இதயம் – 68

நுரையீரல் – 90

கணையம் – 6

கண்கள் – 399

எலும்பு – 112

தோல் – 61

இதய வால்வு – 48

சிறுகுடல் – 18

வயிறு – 3

கை – 1

மொத்தம் – 1,476

X
Dinamani
www.dinamani.com