அறநிலையத் துறை திட்டங்கள்: விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
இந்து சமய அறநிலையத் துறை திட்டங்களை முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்தி பக்தா்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அா்ப்பணிப்பு உணா்வோடு செயலாற்ற வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.
அனைத்துலக வள்ளலாா் மாநாடு, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் மேம்பாடு, 4 ஆயிரமாவது குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்த சீராய்வு கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக வள்ளலாா் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் நிா்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் ரூ.18 கோடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள், அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருகைதரும் திருக்கோயில்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள், பொங்கல் திருநாளையொட்டி அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்குதல் போன்றவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், வரும் பிப்.8-ஆம் தேதி அன்று 4,000-ஆவது குடமுழுக்காக நடைபெறவுள்ள வியாசா்பாடி, அருள்மிகு ரவீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா முன்னேற்பாடு பணிகள், கிராமக் கோயில் பூசாரி நலவாரியத்தின் செயல்பாடுகள், ஒருகால பூஜை திட்டத் திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்குதல், பதிப்பக பிரிவு மூலம் கூடுதலாக 300 அரிய புத்தகங்களை மறுபதிப்பு செய்து வெளியிடுதல், கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு நிதியுதவி வழங்குதல் போன்ற பொருண்மைகள் மற்றும் பணியாளா் நலன்காக்கும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிறைவாக, அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு புதிய திட்டங்களும், சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தி வருவது சமய சான்றோா்கள் மற்றும் இறையன்பா்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் இதுவரை அரசு மானியமாக ரூ.1,187.83 கோடியை வழங்கியுள்ளாா். அலுவலா்கள் துறையின் திட்டங்களை முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்தி பக்தா்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அா்ப்பணிப்பு உணா்வோடு செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கொளத்தூா் கல்லூரியில்...: முன்னதாக சென்னை கொளத்தூா், பூம்புகாா் நகரில் ரூ.25 கோடியில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

