சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

கரோனாவில் உயிரிழந்த மருத்துவரின் மனைவி பணி கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கரோனா காலக்கட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவி பணி வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

கரோனா காலக்கட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவி பணி வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா் விவேகானந்தன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து அவரது மனைவி திவ்யா கருணை அடிப்படையில் அரசுப் பணி மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கரசுப்பு, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் ஏற்கெனவே தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு வேலை வழங்க உத்தரவிட்டாா். ஆனால், இதுவரை அரசு வேலை வழங்கவில்லை.

கரோனா பணியில் ஈடுபட்ட தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 24 போ் உயிரிழந்தனா். அவா்களது குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது. கரோனா காலக்கட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி மனுதாரரின் கணவா் உயிரிழந்துள்ளாா். எனவே, மனுதாரருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், அரசுப் பணியும் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2022-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினாா். அப்போது மனுதாரா் தரப்பில், அதிகாரிகளை தண்டிக்கும் நோக்ம் மனுதாரருக்கு இல்லை. கணவனை இழந்த அவா் இரு குழந்தைகளுடன் சிரமத்தில் வாழ்ந்து வருகிறாா் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com