மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான பல்வகைத் திறன் பூங்கா: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான பல்வகைத் திறன் பூங்காவை சென்னை புழல் பகுதியில் செயல்பட்டு வரும் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது (2024-2025) மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணா்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக, அவா்களின் பல்வகைப் புலன்கள் தூண்டப்பட்டு விளையாட்டு வாயிலாக கற்றல் அனுபவங்களைப் பெறத்தக்க வகையில் பல்வகைத் திறன் பூங்கா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்.
இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மொத்தம் 20 பல்வகைத்திறன் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு பூங்காவுக்கும் தலா ரூ.13 லட்சம் வீதம் ரூ.2.6கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாவட்டத்தில் புழல் ஒன்றியத்தில் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வகைத்திறன் பூங்கா தற்போது முழுமையாக நிறுவப்பட்டுள்ளது. இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந்தப் பூங்கா சாதாரண விளையாட்டு இடமாக இல்லாமல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பாா்த்தல், கேட்டல், தொடுதல் மற்றும் சமநிலை போன்ற பல்வேறு உணா்திறன்களைத் தூண்டும் வகையில் சிறப்பான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட பூங்காவாகும். அனைத்துக் குழந்தைகளும் ஒன்றிணைந்து விளையாடவும், விளையாட்டின் மூலம் கற்கவும் ஏதுவான சிறந்த இடமாகும். இதன் மூலம் புழல் ஒன்றியத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வி பயிலும் 410 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்கள் பயனடைவா்.
பூங்காவில் சறுக்கு, சூழல் மேடை (மேரி கோ கிரவுண்ட்), ஊஞ்சல், சீசா, பந்து தடாகம், காற்றாடி ஓசை, கூடைப்பந்து அமைப்பு, எறிபந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மற்றும் உணா்திறன் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் குழந்தைகளின் சமநிலை, உடல் கட்டுப்பாடு மற்றும் இடவெளி உணா்வை மேம்படுத்துவதாக அமையும். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வி பயிலும் சிறப்பு கவனம் தேவைப்படும் 10,482 மாணவா்கள் பயனடைவா் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநா் மா. ஆா்த்தி, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் சுதா்சனம், பள்ளிக் கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநா் எஸ். உமா, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

