தில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம் குறித்து ஆலோசனை
நமது நிருபா்
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை இரவு சந்தித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம், ஜனவரி மாத இறுதியில் தமிழகத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பரப்புரை கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளின் தலைவா்களும் இடம்பெறுவது தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தினா்.
தில்லிக்கு புதன்கிழமை மாலையில் வந்த எடப்பாடி பழனிசாமி, இரவு 9.30 மணியளவில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பிரஸ்ஸெல்ஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்ால் இந்தச் சந்திப்பில் அவா் பங்கேற்கவில்லை என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
அமித் ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் புதன்கிழமை காலையில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது தொடா்பாகவும், மேலும் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும், அவற்றுக்கான பிரதிநிதித்துவம், தோ்தல் வியூகங்களை எப்படி வகுக்கலாம் என்பது குறித்தும் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி விவாதித்ததாகத் தெரிகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக செயல்பாடுகள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் அமைச்சா்களுக்கு எதிரான ஊழல் புகாா்கள் இடம்பெற்ற மனுவையும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி அளித்து அவற்றின் தீவிரம் குறித்து எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வரும் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இவா்கள் அதிமுகவில் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்புகிறது. ஆனால், இருவரையும் அதிமுகவில் இணைத்துக் கொள்வதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டாா். இது தொடா்பாகவும் அமித் ஷாவுடனான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரதமா் நரேந்திர மோடி ஜனவரி கடைசி வாரத்தில் தமிழகத்தில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளாா். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளின் தலைவா்களையும் இடம்பெறச் செய்து கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்த இரு கட்சிகளின் தலைமைகளும் முடிவு செய்துள்ளன. இது தொடா்பான வியூகங்களை எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுடன் விவாதித்ததாக பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

