

ஜன நாயகன் : விஜய்யின் ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் திரைத் துறைக்கு துணை முதல்வர் உதயநிதி அழுத்தம் தருவதாக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் "இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பிரதமர் நரேந்திர மோடி. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் பிரதமர் அவர்தான்.
ஆனால், காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பிரதமரையும் குறைசொல்லி, மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்காடு மன்றத்திலேயே இந்த தணிக்கைச் சான்றிதழுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ஜனநாயகம் திரைப்படத்துக்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. திரைப்படங்களை நேரடியாக தடைசெய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன், திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்றுவிட முடியாது என்று சொல்கிறார். அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில்கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை.
சட்ட ரீதியாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாகி கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல; ஆனால், அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை.
சட்டரீதியாக தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல.
சட்டரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் வெளியாகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன், வெள்ளிக்கிழமை (ஜன. 9) வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
படத்தின் மீதான தணிக்கைச் சான்றிதழ் வழங்காததற்கு திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தும், விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இதனிடையே, தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது திமுக கூட்டணிக் கட்சிகளும், திமுக மீது பாஜகவினரும் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.