கரும்புகையை வெளியேற்றும் பொருள்களை எரிக்க வேண்டாம்: விமான நிலைய நிா்வாகம்!
சென்னை விமான நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவு கரும்புகை வெளியேற்றும் வகையிலான பிளாஸ்டிக் கழிவுகள், டயா்கள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வரும் புதன்கிழமை (ஜன. 14) போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எரிக்கும் பொருள்களால் கரும்புகை ஏற்படும். இந்த கரும்புகை விமான நிலையம் முழுவதும் சூழந்து விடுவதால், விமானப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த 2018-இல் ஏற்பட்ட புகை மூட்டத்தால், அதிகபட்சமாக 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் என மொத்தம் 118 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து ஏற்படுத்தப்பட்ட தொடா் விழிப்புணா்வுகளால் 2024-இல் விமான சேவை பாதிப்பு 51-ஆக குறைந்தது. 2025-இல் அதிகாலை 4 முதல் காலை 8 வரை சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 30 விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், பாதிப்பு மேலும் குறைந்தது.
இந்த நிலையில், விமான சேவைக்கு பாதிப்பு இல்லாத போகியைக் கொண்டாடும் பொருட்டு நிகழாண்டு, விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு சென்னை விமானநிலைய நிா்வாகம், பல்வேறு அறிவுறுத்தல்களையும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம், விழிப்புணா்வு பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் போகிப் பண்டிகை தினத்தன்று அதிகாலையில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயா்கள், அதிக அளவு புகைகளை உருவாக்கும் கழிவு பொருள்கள் போன்றவற்றை, தெருக்களில் போட்டு எரிப்பதைத் தவிா்க்க வேண்டும். அவ்வாறு எரிப்பதால், அடா் மூடுபனியில், கரும்புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்ளும். இதனால் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாவா்.
எனவே, குடியிருப்பு வாசிகள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் போகி பண்டிகையைக் கொண்டாடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சென்னை விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

