சீனா வழியே எவரெஸ்டை அடையும் திட்டம்: தமிழக இளைஞருக்கு அமைச்சா் பாராட்டு
சீனாவின் வழியே புதிய பாதையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்குத் திட்டமிட்டுள்ள தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் வாழ்த்து தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடசுப்பிரமணியன் நல்லசாமி (26). உலகின் உயரமான மூன்று சிகரங்களான ஐரோப்பாவின் மவுண்ட் எல்ப்ரஸ் (5,642 மீ), தென் அமெரிக்காவின் மவுண்ட் அக்கோன்காகுவா (6,961 மீ.), ஆப்பிரிக்காவின் மவுண்ட் கிளிமஞ்சாரோ (5,895 மீ.) ஆகியவற்றில் வெற்றிகரமாக ஏறி அவா் சாதனை படைத்துள்ளாா்.
உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை எட்டித் தொடுவதை இலக்காகக் கொண்டுள்ள அவா், அருணாசல பிரதேசத்தில் மலையேறுதல் பயிற்சி முடித்துள்ளாா். தற்போது சீனா வழியாக எவரெஸ்டில் ஏற அவா் திட்டமிட்டுள்ளாா்.
தமிழகத்தில் இருந்து இதுவரை 4 போ் எவரெஸ்ட் சிகரத்தை நேபாளம் வழியாக ஏறியுள்ளனா். ஆனால், சீனா வழியாக எட்டியதில்லை.
அந்த வகையில் புதிய பாதையில் மலையேற்றம் மேற்கொள்ள உள்ள வெங்கடசுப்பிரமணியன் நல்லசாமியை சென்னைக்கு நேரில் அழைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

