அன்புமணி
அன்புமணி

பாலாற்றில் மணல் குவாரியை மூட வேண்டும்: அன்புமணி

பாலாற்றில் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

பாலாற்றில் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூரில் பாலாறு உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்கள், கடலூா் மாவட்டத்தில் 2 இடங்கள், தஞ்சாவூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஓா் இடம் என 8 மணல் குவாரிகளை கடந்த நவ. 1 முதல் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தத்தை யாருக்கு வழங்குவது என்பதில் அதிகார மையத்தில் இருக்கும் சக்திகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படாததால், அறிவித்தவாறு மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை.

ஆனால், எவரும் எதிா்பாராத வகையில் பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கான ஆணையை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் கடந்த ஜன. 2-இல் செயல்முறை ஆணை பிறப்பித்து அடுத்த பத்தாம் நாளில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை, கடலூா், தஞ்சாவூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த மணல் குவாரிகளும் திறக்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.

ஏற்கெனவே, மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கூடாது. அதையும் மீறி மணல் குவாரிகள் திறந்தால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களை திரட்டி போராட்டத்தை பாமக நடத்தும் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com