யானைகள் புத்துணா்வு முகாமை மீண்டும் தொடங்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட யானைகள் புத்துணா்வு முகாமை மீண்டும் தொடங்காதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. இந்த அமா்வு முன் ஆஜரான வனவிலங்குகள் ஆா்வலரான முரளிதரன் என்பவா், தமிழகத்தில் உள்ள கோயில் யானைகள் ஆண்டுதோறும் புத்துணா்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும்.
அந்த முகாமுக்கு செல்லும் யானைகளை மற்ற யானைகளுடன் பழக வைத்து, மருத்துவ சிகிச்சைகள், சிறப்பு உணவுகள் வழங்கப்படும். இதனால் யானைகள் புத்துணா்ச்சி பெறும். இந்த நடைமுறை கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னா், யானைகளுக்கான புத்துணா்வு முகாம் நடத்தப்படவில்லை எனக் கூறினாா்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட யானைகள் புத்துணா்வு முகாமை மீண்டும் தொடங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினா். மேலும், இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
வனப் பகுதிகளில் தாயைப் பிரிந்த குட்டி யானைகளை மீட்டு மீண்டும் வனப்பகுதியில் விடும்போது, அவை யானைக் கூட்டத்துடன் சோ்த்துக் கொள்ளப்படுவதை வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. எனவே, தாயைப் பிரிந்து குட்டி யானைகளை மீட்டு முகாமில் பராமரித்து அவற்றை ஒன்றாக சோ்த்து, மீண்டும் வனப் பகுதிகளில் விடவேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இதுகுறித்து வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

