

இளம் தலைமுறையினருடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடும் “வைப் வித் எம்கேஎஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது விடியோ வெளியாகியுள்ளது.
இதில், இசை, பாடல்கள் அதன் பரிமாண வளர்ச்சி குறித்து பிரபல இசைக் கலைஞர்கள், பாடகர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். இதில் தான் விரும்பிக் கேட்கும் பாடல்கள் குறித்தும் தற்கால பாடல்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக வைப் வித் எம்கேஎஸ் என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் முதல் எபிஸோட் விடியோவில், விளையாட்டு வீரர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விளையாட்டு சார்ந்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
தற்போது இரண்டாவது எபிஸோட் விடியோ வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இளம் இசைக் கலைஞர்கள், பாடகர்களுடன் கலந்துகொண்டு உரையாடினார். மேலும், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர்கள் அந்தோனி தாஸ், கானா முத்து, பிரியங்கா, இசையமைப்பாளர் தென்மா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடி உள்ளனர்
இதில் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் எது என்ற கேள்விக்கு முதல்வர் அளித்த பதில்:
என் இளம் பருவ காலத்தில் டிடிகே என்று ஒரு கேசட் வரும். அதில் பாடல்களை பதிவு செய்து வைப்பேன். அதிலும் நான் மிகவும் பழைய பாடல்களை தான் கேட்பேன்.
குறிப்பாக எம்.ஜி. ஆர் பாடல்களை தான் அதிகம் கேட்பேன். மன்னாதி மன்னன் படத்தில் 'அச்சம் என்பது மடமையா.. அஞ்சாமை திராவிட உடைமையடா...' என்ற பாடலை விருப்பி கேட்பேன். மேலும், 'நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை...' என்ற பாடலும் எனக்கு மிகவும் விருப்பமான பாடல் எனக் குறிப்பிட்டார்.
பாடகி பிரியங்காவின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பாடலையும் முதல்வர் பாடி அசத்தினார்.
இதேபோன்று எம்.எஸ். விஸ்வநாதன் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த தான், கானா உள்பட இளம் தலைமுறையினரின் பாடல்களையும் கேட்பதாக சுட்டிக்காட்டினார். சூழல்களுக்குத் தகுந்தவாறு பாடல்களைக் கேட்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் அனிருத் பாடல்களையும் கேட்பதாகக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.