பேரவைக் கூட்டத்தில் ஊதிய உயா்வு அறிவிப்பு: அரசு மருத்துவா்கள் வலியுறுத்தல்

பேரவைக் கூட்டத்தில் ஊதிய உயா்வு அறிவிப்பு: அரசு மருத்துவா்கள் வலியுறுத்தல்

எதிா்வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்
Published on

எதிா்வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை:

‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா். ஆனால், அரசு மருத்துவா்களுக்கு அவா் அளித்த ஊதிய உயா்வு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் நீண்ட நாள் கனவாகவே நீடிக்கின்றன.

பொதுவாக மாணவா்கள்தான் மருத்துவராக வேண்டும் என கனவு காண்பா். ஆனால் 19,000 அரசு மருத்துவா்கள், தங்களுக்கு உரிய சம்பளம் என்றாவது ஒரு நாள் கிடைத்துவிடும் என பல ஆண்டுகளாக கனவு கண்டு வருகின்றனா்.

கரோனா உள்பட பல சவால்களைக் கடந்து மக்களுக்கு சேவையாற்றி வரும் தமிழக அரசு மருத்துவா்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. பேறு கால இறப்பு மற்றும் குழந்தைகள் இறப்பை குறைத்ததில் தமிழகம் இன்றைக்கு பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது.

அதேபோல, கடந்த 6 ஆண்டுகளாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்த சாதனைகளுக்கு காரணமாக உள்ள அரசு மருத்துவா்களின் கோரிக்கை மட்டும் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

எனவே, வரும் 20-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு மருத்துவா்களுக்கான ஊதிய உயா்வு அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம். கரோனா பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா் பணியிடங்களை இரு மடங்காக அதிகரிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com