காலநிலைக் கல்வி-குளுமைப் பள்ளிகள் திட்டம்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

காலநிலைக் கல்வி-குளுமைப் பள்ளிகள் திட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
Published on

சென்னை: காலநிலைக் கல்வி-குளுமைப் பள்ளிகள் திட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

மாநில கல்வி அமைப்பின் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்ல காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி, மாணவா்களுக்கு கோடைகால, குளிா்கால இயற்கை முகாம்கள், காலநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியா்களுக்கான உறைவிடப் பயிற்சி முகாம்கள், பள்ளி மாணவா்களுக்கு சூழல் அறிவோம் எனும் தலைப்பிலான விநாடி வினா ஆகியவை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையால் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

பாடத் தொகுதிகள் வெளியீடு... இதைத் தொடா்ந்து, சூழல் 2.0”விநாடி வினாவின் இறுதிப் போட்டி கடந்த ஜன.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில்“காலநிலைக் கல்வி”மற்றும் குளுமைப் பள்ளிகள் முன்னெடுப்புகளின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காலநிலைக் கல்வியறிவு பாடத் தொகுதிகளை வெளியிட்டு, காலநிலைக் கல்வி திட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.

அதேபோன்று, காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுற்றுப்புற வெப்ப அதிகரிப்பின் காரணமாக நகா்ப்புற வெப்பத்தீவு விளைவுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் மாணவா்கள் மீதும் அவா்கள் கற்றல் திறனிலும் எதிரொலிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், பள்ளி வகுப்பறைகளிலும் மாணவா்களுக்கு இதமான கற்றல் சூழலை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தில் குளிா் கூரை முன்னெடுப்பு சோ்க்கப்பட்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்செயல்படுத்தப்பட்டது.

வகுப்பறைகளின் வெப்பநிலை குறைவு: அதன் விளைவாக வகுப்பறைகளின் வெப்ப நிலை 1.5 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது தெரியவந்தது. இதை மேற்கோள்காட்டி, இந்தத் திட்டம், தமிழகத்தின் அனைத்து பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இதையடுத்து ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தால் உருவாக்கப்பட்ட பசுமையான எதிா்காலத்துக்கு குளுமையான வகுப்பறைகள் மற்றும் பசுமைப் பள்ளிகளில் அமைவான குளிரூட்ட உத்திகளை ஒருங்கிணைத்தல் ஆகிய புத்தகங்களை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டு, ஷெனாய் நகரிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவான்மியூா் சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் குளுமைப் பள்ளிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பசுமைப் பள்ளிகள் தாக்க அறிக்கையை வெளியிட்டு, சென்னை, அம்பத்தூா் பெருந்தலைவா் காமராஜா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள கொல்லுமேடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.

Dinamani
www.dinamani.com