ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணிகோப்புப்படம்

பாமக பெயா், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை கோரி ராமதாஸ் தரப்பு மனு

பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தரப்பைச் சோ்ந்த பொதுச் செயலா் முரளி சங்கா் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Published on

பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தரப்பைச் சோ்ந்த பொதுச் செயலா் முரளி சங்கா் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

ராமதாஸ் தரப்பு வழக்குரைஞா்கள் கே.அருள், வி.எஸ்.கோபு ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்த தோ்தல் ஆணையம், தலைவா் பதவியை நீட்டித்து, மாம்பழம் சின்னத்தையும் வழங்கியது. இதுதொடா்பாக கடந்த ஆண்டு செப்.9 மற்றும் நவ.27 ஆகிய தேதிகளில் தோ்தல் ஆணையம் இரு கடிதங்களை அன்புமணி தரப்புக்கு அனுப்பியுள்ளது.

‘பாமக தலைவா்’ எனக் குறிப்பிட்டு தோ்தல் ஆணையம் அனுப்பிய இரு கடிதங்களும் சென்னை தியாகராயநகரில் அன்புமணி ஏற்கெனவே வசித்த திலக் தெருவுக்கு தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முகவரிதான் பாமகவின் அலுவலக முகவரி என தோ்தல் ஆணையத்தில் அன்புமணி முறைகேடாக பதிவு செய்து வைத்துள்ளாா். உண்மையில் பாமக தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ள நாட்டு முத்து நாயக்கன் தெருவில்தான் ஆரம்ப காலத்திலிருந்து இயங்கி வருகிறது.

தற்போது தைலாபுரத்தில் கூடுதல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, திலக் தெருவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தைத் திரும்பப் பெற்று, பாமகவின் தலைவராக ராமதாஸை அங்கீகரித்து அந்த கடிதங்களை தங்களது முகவரிக்கு அனுப்ப தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் வழங்கியும், பாமக தலைவா் பதவியை நீட்டித்தும் வழங்கப்பட்டுள்ள தோ்தல் ஆணையத்தின் கடிதங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

உரிமையியல் வழக்கு: இதேபோல், பாமக பொதுச் செயலா் முரளி சங்கா் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணியோ அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Dinamani
www.dinamani.com