

கோவை: கோவை வனப்பகுதியில் பிடிபட்டு டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி அன்று தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு மாத ஆண் குட்டி யானையை, அதன் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது அப்பகுதியில் சில நாள்கள் பெய்த மழையின் காரணமாக யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் தென்படவில்லை எனவும் இதனால் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு வந்து ஜூன் 13ஆம் தேதி தனி அறையில் வைத்து குட்டி யானையை, யானைப் பாகன்கள் மூலம் தற்பொழுது பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானையின் வயது தற்போது ஒன்பது மாதம் என வனத்துறையினர் என தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடி மடை பகுதியில் பிறந்து 4 மாதங்களே ஆன ஆண் குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து வந்தது.
யானைக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க முயற்சி நடைபெற்றது. ஆனால் அது முடியாமல் போனதால் கடந்த ஜனவரி 10ஆம் தேதி குட்டி மீட்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனியாக பாகன்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இரண்டு யானைகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பால் குடித்து வருகின்றன. நோய் தொற்று ஏற்படாமல் சுற்றுச்சூழலுக்கு உடல்நிலை ஒத்துப்போகவும் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்த இரண்டு குட்டி யானைகளையும் யானை கூட்டம் இருக்கும் பகுதியில் விடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று முதல் நான்கு முறை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். அந்தத் திட்டம் பயன் அளிக்கவில்லை என்றால் கோழிகமுத்தி முகாமில் தொடர்ந்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.