

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் அக்கட்சியினருக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
திமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று(ஜன. 20) முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் மு. க. ஸ்டாலின் பேசியதாவது, “கூட்டணிக் கட்சிகளில் நம்மைப் பிடிக்காதச் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் தேவையில்லாத கருத்துகளை வெளிப்படுத்தி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது.
கூட்டணி விவகாரத்தையும் தொகுதிப் பங்கீட்டையும் நான் பார்த்துக்கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து தேர்தலில் நீங்கள் நூறு சதவீதம் களப் பணியாற்ற வேண்டும்.
மக்கள் குறைகளைத் தெரிவித்தால், அவர்களிடம் நாம் கோபத்தையோ அதிருப்தியையோ வெளிப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொள்ளக்கூடாது. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து பணியாற்றுங்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை மக்களின் பங்களிப்புடன் மக்களின் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். தமிழகத்தில் ஒரு குடும்பத்தைக்கூட விடாமல் எல்லோரும் நம் திட்டங்களால் பயனடைய வேண்டும் என பார்த்துப்பார்த்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
இந்தத் திராவிட மாடலின் சாதனைகளை, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இரவு - பகல் பாராமல் தேர்தல் வெற்றிக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.