

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜன. 24 ஆம் தேதி வரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கயிருந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கவில்லை என்று தெரிவித்து, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து இன்று(ஜன. 20) வெளியேறினார்.
இதனையடுத்து, ஆளுநர் உரையை அவர் படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
இதனிடையே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்தும், ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இதன்பின்னர், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரவைக் கூட்டத்தொடரை வரும் ஜன. 24 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுத்துள்ளது.
இதன்படி, மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை(ஜன. 21) தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும்.
வரும் ஜன. 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடைபெறும், அதற்கு ஜன. 24 ஆம் தேதி முதல்வர் பதிலுரை வழங்குவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.