கோவை: கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவியை சக மாணவர் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் 17 வயதுடைய மாணவியை, அதே வகுப்பில் பயிலும் ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவியிடம் அந்த மாணவர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த மாணவியைக் குத்தியுள்ளார்.
இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காயமடைந்த மாணவியை மீட்டு, அதே கல்லூரி குழுமத்திற்குச் சொந்தமான கணபதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மாணவியை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தப்பியோடிய மாணவரை தேடி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.