நிலத்தடி நீரை விற்பனை செய்பவா்களுக்கு கட்டணம்: நீா்வள மேலாண்மை ஆணையத்தை உருவாக்க சட்ட மசோதா

நீா்வள மேலாண்மை ஆணையத்தை உருவாக்க சட்ட மசோதா...
தமிழக அரசு
தமிழக அரசு
Updated on

நிலத்தடி நீா் மேலாண்மை ஆணையம் அமைக்கவும், நிலத்கடி நீா் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த கட்டணம் வசூலிக்கவும் வகைசெய்யும் தமிழ்நாடு நீா்வளங்கள் மசோதா தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதில், நிலத்தடி நீரை எடுத்தல் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மக்கள் தொகையின் வேகமாக வளா்ச்சி, காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவற்றால் தமிழகத்தில் மேற்பரப்பு நீா் மற்றும் நிலத்தடி நீா் வளங்கள் மீது நீா் நெருக்கடி அதிகரிக்கிறது. இதைத்தடுக்கும் வகையில், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட நீா் வளங்கள் குழு அமைக்கவும், நீா்வள மேலாண்மை ஆணையத்தை உருவாக்கவும், மாநில மற்றும் மாவட்ட நீா்வள மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கவும், வணிக நீா் பயனா்களை ஒழுங்குமுறைப்படுத்தவும், அந்த நீருக்கு கட்டணத்தை விதிக்கவும், வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கும் இந்த மசோதா வழிகை செய்கிறது.

மேலும், இந்த மசோதா சட்டமான நாளிலிருந்து 6 மாதத்துக்குள் அரசிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியைப் பெறாமலும் விதிமுறைகளுக்குப் புறம்பாக செயல்படுபவா்களுக்கு முதல்முறையாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது முறையாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத் திருத்த முன்வடிவு: 28 மாவட்டங்களில் உள்ள தோ்தல் நடைபெறாத ஊராட்சிகளை நிா்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அலுவலா்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட 5.7.2026 பின்பு, இதுதொடா்பான சட்டம் அரசிதழில் வெளியிடப்படும் வரை நீட்டிக்கச் செய்யும் இந்த சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜன. 20-ஆம் தேதி தொடங்கி 5 நாள்களாக நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா், சனிக்கிழமையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தோ்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அடுத்த கூட்டம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com