ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து 3 நாள்கள் அவை செயல்பட்ட நிலையில் ஆளுநர் உரைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்து வருகிறார். முதல்வரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்து அவையில் பங்கேற்கவில்லை.
பதிலுரையில் முதல்வர் பேசுகையில்,
"ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
சோதனைகள் எனக்கு புதிதல்ல, சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடையலாம், ஆனால் சோதனைகள் என்னை எதுவும் செய்யாது.
தேசபக்தி குறித்து யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். எங்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு அவர்கள் இந்த தேசத்திற்கு எதுவும் செய்யவில்லை.
ஆளுநர் கேள்வி கேட்க வேண்டும் என்றால் மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும். ஒரே காரணத்தைத் திரும்ப திரும்பச் சொல்லி உரையை வாசிக்காமல் தவிர்த்து வருகிறார் ஆளுநர். ஆளுநர் தனது உரையை படிக்காமல் உள்ளது வேடிக்கையாக உள்ளது. இது மக்களாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால்.
தமிழ்நாடு அனைத்து வகையில் முன்னேறிய மாநிலமாக இருந்து வருகிறது" என்று கூறி திமுக அரசில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.