மூத்த தமிழறிஞரும். செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் (84) உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) காலமானார்.
கல்லூரிப் பேராசிரியர், இலக்கிய ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவரான தெ. ஞானசுந்தரத்துக்கு சமீபத்தில் தமிழக அரசு இலக்கிய மாமணி விருதை வழங்கி கௌரவித்தது.
மயிலாடுதுறையில் கம்பன் பிறந்த தேரழுந்தூருக்கு அருகே குழையூர் என்னும் ஊரில் பிறந்த தெ. ஞானசுந்தரம் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் பட்டயமும் பெற்று, வைணவ உரைவளத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணியைத் தொடங்கி நீண்ட காலம் தமிழ்த்துறைத் தலைவராகவும், அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றினார்.
பணி ஓய்வுக்குப் பின்னர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கம்பன் இருக்கையில் முதல் பேராசிரியராக இரு ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
வைணவ இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையாளர். குறுந்தொகைத் தெளிவு', 'கற்பக மலர்' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
வால்மீகி ராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டு எழுதியது, வைணவ உரை வளம், திவ்யப் பிரபந்த உரை போன்ற இவரது ஆய்வு நூல்கள் தனிக் கவனத்தைப் பெற்றவை. பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவரான இவர், பாரதிதாசனையும் சந்தித்துப் பழகியவர். மறைந்த நீதிபதி மு.மு. இஸ்மாயிலுடன் நட்போடு இருந்தவர். கம்பன் கழகத்தைத் தோற்றுவித்ததில் முக்கியப் பங்களித்தவர்.
தினமணி-யில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்த இவர், சில தினங்களுக்கு முன்பு செம்மொழி நிறுவன பயிலரங்கில் பெரியபுராணம், கம்பராமாயணம் குறித்து உரையாற்றினர். இதேபோன்று கடந்த வாரம் சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரியில் திருப்பாவை குறித்தும் பேருரையாற்றினார்.
தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்பட்ட, மிகச்சிறந்த புலமையாளரான தெ. ஞானசுந்தரம், சேக்கிழார் ஆய்வு மையம், கம்பன் கழகங்கள், ராஜா சர் முத்தையா அறக்கட்டளை, கொல்கத்தா பாரதி சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அளித்த 14 விருதுகளைப் பெற்றுள்ளார்.
சென்னை பாடியில் வசித்து வந்த இவருக்கு மனைவி மணிமேகலை, மகன்கள் சேந்தன், அருண்மொழி, மாதவன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் அருண்மொழி, மாதவன் இருவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.
பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மறைவுக்கு தில்லிக் கம்பன் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.