மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தமிழுலகில் என்றென்றும்...

மூத்த தமிழறிஞரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள்.

Published On :

மூத்த தமிழறிஞரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: 'ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை' என்ற திருக்குறள் மொழிக்கேற்ப வாழ்ந்தவர். ஆயிரக்கணக்கான தமிழார்வம் கொண்ட மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர்.

பிரதமர் மோடி: தமிழ் கலாசாரம் மற்றும் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் வருங்காலத் தலைமுறையினரால் நினைவுகூரப்படும். தனது எழுத்துகள் மற்றும் வாழ்நாள் அர்ப்பணிப்பால் சமூகத்தில் கலாசார உணர்வை மேம்படுத்தினார். 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்துக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் அவரைச் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன். கம்பராமாயணம் குறித்த அவரது புரிதல்கள் வியப்புக்குரியது.

ஆளுநர் ஆர்.என். ரவி: செம்மொழித் தமிழ், வைணவ மரபுகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு சிறந்த அறிஞர் . மாபெரும் காவியங்களான கம்பராமாயணம், திவ்யப் பிரபந்தத்துக்கு அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பங்களிப்புகள், தமிழ் மரபை ஆழமாகச் செழுமைப்படுத்தியுள்ளன. அவரது மரபு பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்: முதுபெரும் தமிழறிஞர்களான மு.வரதராசனார், அ.ச. ஞானசம்பந்தன் ஆகியோருடன் பழகும் பேற்றினைப் பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நன்மதிப்பைப் பெற்றவர். பக்தி இலக்கியங்கள் சார்ந்து, பல ஆய்வுநூல்களை எழுதியதோடு, தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் தமிழ் மேடைகளை அலங்கரித்தவர் தெ. ஞானசுந்தரம்.

2024-ஆம் ஆண்டுக்கான 'இலக்கிய மாமணி' விருதை மரபுத்தமிழ் பிரிவில் அவருக்கு நான் வழங்கியபோது பெரிதும் அகமகிழ்ந்தார். 'தனியாரிடம் பெறும் விருதுகள் மகிழ்ச்சியளிப்பன என்றாலும், அரசு அளிக்கும் விருதுதான் அங்கீகாரம் பெறக்கூடியது' என அப்போது மனநிறைவுடன் தெரிவித்தார். பெரும் பேராசிரியர்களிடம் தமிழ் பயின்று, பல மாணவர்களுக்கு ஆசானாகத் திகழ்ந்து, இறுதிவரையில் சுறுசுறுப்பாக இயங்கித் தமிழ்ப்பணியாற்றியவர்.

தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் ம.இராசேந்திரன்: பாடலில் இருக்கும் சொற்களைக் கொண்டு மறைந்து கிடக்கும் புதையல் பொருளை வால்மீகி, கம்பன் மட்டுமன்றி, பல இலக்கியங்களிலிருந்தும் எடுத்துக் காட்டும் புலமைக்குச் சொந்தக்காரர். அரிய நூல் பல கற்றவர்.

கம்பன், தயரதன் அமைச்சர்களுக்குத் தகுதியாகச் சொல்லியவை, கம்பன் புகழ் பேசிவந்த அவருக்கும் பொருத்தமாக உள்ளன. எனவே, கம்பன் பாடலிலிருந்தே ஒரு பாடலைச் சொல்லி, அவருக்கு அஞ்சலி செய்யலாம். உற்றது கொண்டு, மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்; மற்றது வினையின் வந்ததாயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும் கற்றவர்; மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவர் ய.மணிகண்டன்: தமிழ்ச் சமூகத்தில், தமிழுலகில் ஒரு பேரிலக்கியத்தை முழுமையாகக் கற்றுத் துறை போகிய அறிஞராகவும், தமிழ் மொழியின் தொன்மை தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை தேர்ந்த பயிற்சி கொண்டவராகவும் ஒரு சிலரை மட்டும்தான் நம்மால் குறிப்பிட முடியும். அத்தகைய ஒருசிலரில் முக்கியமானவர் அறிஞர் தெ.ஞானசுந்தரம்.

அவர் பன்முக ஆளுமையெனினும், கம்பனில் பேரறிஞர் என்பதே அவரது முதன்மை முகம். உவமை சொல்ல முடியாத வகையில் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் புலமை கொண்ட பெருந்தமிழர் அவர்.

வழக்குரைஞர் கே.சுமதி: கம்ப ராமாயணம் குறித்து மூத்த தமிழறிஞர் தெ.ஞா. பேசிய மேடைகளுக்கு மட்டுமல்லாமல், அது குறித்து இளைஞர்கள் யார் எங்கு பேசினாலும் அங்கு நேரில் சென்று அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பார். இளைஞர்களை இன்றளவும் கைப்பிடித்து அழைத்துச் சென்று கம்பர் குறித்து கற்றுத் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

சென்னைக் கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண புத்தகத்துக்கு அருஞ்சொற்பொருள் வழங்கி சிறந்த முறையில் பங்காற்றியுள்ளார். சான்றாண்மையும், ஞானமும் ஒருங்கே பெற்ற கடைசி அறிஞரும் மறைந்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

கல்வெட்டு அறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்: வைணவம் குறித்த ஆய்வில் மிகச் சிறந்த இடத்தைத் தொட்டவர். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றி, தமிழுக்கு மிகச் சிறந்த சேவை ஆற்றியவர். தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கும், பேசுவதற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர். அவருடைய இறப்பு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும்.

முதுமுனைவர் அரங்க.பாரி: தமிழில் ஆழ்ந்த புலமை பெற்ற அதேவேளை, சம்ஸ்கிருதத்திலும் பட்டயம் பயின்று, இரு மொழிகளையும் ஒப்பிட்டு பாடம் சொல்லிய பண்பாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடித் துறையில் அவரின் பணிக் காலத்தில் அச்சேறிய சுவடிகள் அவரது தமிழ்ப் பணியின் உச்சங்களில் ஒன்று. தினமணி தமிழ்

மணியில் அவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாடு மட்டுமன்றி, அயல்நாடுகளில் வாழ்வோருக்கும் தமிழ் கற்பித்த சிறப்பிற்குரியவர்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்: தெ.ஞானசுந்தரம் தமிழுக்கு வரமாக வாய்த்த பேரறிஞர். தமது ஆசிரியர் மு.வ.வை போலவே அமைதியில் பூத்த சான்றாண்மையாளர். சைவ இலக்கியங்களில் நீந்திப் புத்துரை காணும் நச்சினார்க்கினியர். திருவாசகத்துக்கு புனிதம் குறையாமல் நுண்பொருள் கண்டறிந்த மேதை. ஆழ்வார்களைப் பற்றி பேசும்போது நம் காலத்து நம்பிகளோ என்று வியக்கத்தக்க புலமைச் சமுத்திரம். ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், வரலாறு கண்ட பொங்கு மறைக் காவிரியில் நாம் கை நழுவ விட்டுவிட்ட தங்கக் குடம்.

தமிழறிஞர் சாலமன் பாப்பையா: தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கைவரப் பெற்றதுடன் சைவம், வைணவம், கம்பன், வள்ளுவத்தில் ஆழங்காற்பட்ட புலமை கொண்டவர். தெ.ஞானசுந்தரத்தின் இழப்பு தமிழ்ச் சமுதாயத்துக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம்.

தமிழறிஞர் சொ.சொ.மீ.சுந்தரம்: தன்னலமில்லாதவர், தமிழ் நலம் பேணியவர், நேர்மையாளர், அதிக வாசிப்பும், ஆழமான சிந்தனையும் கொண்டவர். பேச்சில் இனிமையும், அன்புடன் பழகும் தன்மையும் அவரது இயல்பான குணங்கள். அவரது இழப்பு தமிழ்கூறு நல்லுலகுக்குப் பேரிழப்பு.

பேராசிரியர் ராமச்சந்திரன்: தெளிவான ஞானத்தின் மறுஉருவம் தெ. ஞானசுந்தரம். வைணவ பாசுரங்களுக்கு அதிகளவில் உரை எழுதியவர். அனைவரிடமும் அன்பாகப் பழகக் கூடிய எளிய மனிதர். குழந்தைகளின் மேடைப் பேச்சையும் அமைதியாகக் கேட்டு நல் உள்ளத்தோடு பாராட்டக்கூடிய பண்பாளர்.

பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்: சென்னைக் கம்பன் கழகத்தின் கம்பராமாயணப் பதிப்புக்குத் துணை நின்றவர். கம்பனை எழுத்தெண்ணிக் கற்றவர். எழுத்தாலும், பேச்சாலும் அனைவரையும் கவரும் ஆற்றல் பெற்றவர். தெ. ஞானசுந்தரத்தின் மறைவை பேரிழப்பு என்று கூறி எளிதில் கடந்திட முடியவில்லை. தமிழ் வாழ்வறியும் காலமெல்லாம் அவர் பெயரும் நிலைத்து நிற்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.