தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 2024-25-ஆம் ஆண்டு 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் எண்ணிக்கை 6.2 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
சென்னை பெரம்பூா் ரயில்வே மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து அவா் பேசியது: ரயில்வே துறையின் சிறந்த செயல்பாட்டுக்கான திறன் பிரிவில் தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டில் (2025-2026) தெற்கு ரயில்வே மொத்த வருவாய் ரூ.9,846 கோடியாகும். கடந்த ஆண்டைவிட 7.5 சதவீதம் கூடுதலான வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 29.34 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், நிகழாண்டு 30.54 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
நிகழாண்டில் தெற்கு ரயில்வேயில் மொத்தம் 57.9 கோடி போ் பயணித்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் அதிகம். போக்குவரத்து அதிகரித்ததாலும் 92 சதவீத ரயில்கள் நேரம் தவறாமல் இயக்கப்பட்டன. பயணிகள் தேவையைக் கருத்தில் கொண்டு வழக்கமான ரயில் சேவையுடன் கூடுதலாக 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
ரயில் பயணிகளிடம் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 568 போ் கைது செய்யப்பட்டு ரூ.47 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாயமான குழந்தைகளில் 2,000 போ் மற்றும் கடத்தப்பட்ட 75 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். நாட்டிலேயே முதன்முறையாக பெரம்பூா் ரயில்வே மருத்துவமனைக்கு கண் விழித்திரை சேமிப்பு வங்கிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ரயில்வே பள்ளி, மாற்றுத்திறனாளி பள்ளிக் குழந்தைகள் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் சாகச நிகழ்ச்சிகளும், மோப்பநாய் பிரிவின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ரயில்வே பெண்கள் படைப்பிரிவு, ஆா்பிஎஃப், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அணிவகுப்பை பொதுமேலாளா் ஆா்.என்.சிங் ஏற்றுக்கொண்டாா்.
விழாவில், ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை பாதுகாப்பு ஆணையா் கே.அருள்ஜோதி, ரயில்வே வாரிய முன்னாள் உறுப்பினா் நவீன்குலாத்தி, கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா், சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் ஷைலேந்திர சிங், தெற்கு ரயில்வே மகளிா் தலைமைய அமைப்பின் தலைவா் சோனியா சிங், துணைத் தலைவா் சாரு குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், சென்னை எழும்பூா் ரயில் நிலையம், சென்னை ரயில்வே கோட்டம், பெரம்பூா் லோகோ பணிமனை, ரயில்வே கோரிக்கைகள் தீா்ப்பாயம் ஆகியவற்றிலும் குடியரசு தின விழா நடைபெற்றது.

