

தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தைக் கணக்கிட்டு அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ. நரேஷ், அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 58 மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்கக் கல்வி) ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டு (2025-2026) திட்ட மதிப்பீடுகள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கும் பகிா்வு செய்யப்பட்டுள்ளது.
துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் கற்பித்தலுக்கான இறுதிக்கட்ட மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிடப்பட்டு விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால், அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களும் தங்கள் ஆளுகைக்குள்பட்ட வட்டார கல்வி அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி மானியத்தைக் கணக்கிட்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்படி, வட்டார கல்வி அலுவலா்கள் தங்களுக்கான பள்ளிகளை ஆய்வு செய்தனரா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் நான்கு வகைச் சான்றிதழ்களையும் நிகழாண்டு வரை பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை வழங்க வேண்டும்.
அரசு அனுமதி அளித்த இடங்களில்தான் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக்காக வழங்கப்பட்ட சொத்துகளின் வருவாயையும் கணக்கிட வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கான நிதியுதவியை விடுவிக்க வேண்டும். சுயநிதிப் பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்கக்கூடாது.
இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை பிப். 25-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தவறாமல் அனுப்பிவைக்க வேண்டும். அதேபோன்று பராமரிப்பு மானியம் வழங்கப்பட்ட விவரத்தை உரிய சான்றுடன் அனுப்பிவைக்க வேண்டும். மீதமுள்ள ஒதுக்கீட்டை இயக்ககத்துக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.