எண்மக் கற்றல் - அளவுகோல் அவசியம்!

டென்மார்க் அரசு தொடக்கக் கல்வியில் எண்மக் கற்றல் (டிஜிட்டல்) உபகரணங்களின் பயன்பாட்டை விடுவிக்க உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

டென்மார்க் அரசு தொடக்கக் கல்வியில் எண்மக் கற்றல் (டிஜிட்டல்) உபகரணங்களின் பயன்பாட்டை விடுவிக்க உள்ளது. அதற்கு மாற்றாக அச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகளில் எழுதும் முறைகளை உயிர்ப்பிக்க உள்ளது. மாணவர்கள் கைகளால் எழுதுவதற்கான பயிற்சியின்மை என்பது பல்வேறு சவால்களைத் தோற்றுவிக்கின்றன. நினைவாற்றல் மட்டுப்படுகிறது; சக மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பறிக்கிறது; அடுத்தவர் களோடு பழகும் வாய்ப்பைக் குறைக்கிறது. அறிதிறன்பேசியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் உண்டு.

குறிப்பாக பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகள் வகுப்பறைக்குள் அறிதிறன்பேசி உபயோகத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டன. இன்றைக்கு இந்தியா முழுவதும் எண்ம (டிஜிட்டல்) வகுப்பறைகள் பெருகி வருகின்றன. நல்வாய்ப்பாக அரசு கல்வி நிறுவனங்கள் இன்னும் அச்சடிக்கப்பட்ட பாடநூல்களையே பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் கற்றலில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான எச்சரிக்கை மணியாக இதைக் காண இயலும்.

இன்று வழக்கொழிந்துவிட்ட பல வகுப்பறைச் செயல்பாடுகளை நினைவுகூர்வதன்மூலம் பெருகும் படைப்பாற்றல் வளர்ச்சியை மதிப்பீடு செய்வோம். சிறுவயதில் "சிலேட்' என்ற சிறு கற்பலகையை வைத்துக்கொண்டு எங்கள் வயதையொத்தவர்கள் செய்த சாதனைகள் எண்ணற்றவை.பள்ளி வகுப்பறையில் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எங்களுடைய கற்பலகையை பல சம பாகங்களாக பிரித்து, அதில் எங்கள் கற்பனைக்கெட்டிய ஓவியங்களை வரைந்து கொள்வோம். பிறகு, ஓய்வு கிடைக்கும்போது ஒவ்வொருவரும் நாங்கள் வரைந்த பொம்மைகளை அடிப்படையாக வைத்து கதைகளைக் கூறுவோம். அவற்றில் பல அற்புதமான கதைகளாக அமையும்.

ஒருவர் வரையும் படங்களிலிருந்து மற்றவர்கள் புதுப்புது ஓவியங்களை வரையக் கற்றுக்கொள்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக ஓவியம் தவறாகிவிடுமே என்கிற எண்ணமே இருக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து அழித்து வரைவோம்.

பின்னாள்களில் நோட்டு புத்தகங்களில் விரிவாக எழுத ஓர் அற்புதமான பயிற்சியாக அந்த சிறு கற்பலகை உதவியது. இதுபோலவே இருவர் ஈடுபடும் மற்றொரு செயல்பாடும் உண்டு. கற்பலகையில் 1, 2, 3 என சுமார் 50 வரை எண்களை மாற்றி மாற்றி எழுதிவிடுவர். ஒருவர் பல்வேறு எண்களை அடுத்தடுத்து மாற்றி மாற்றிக் கூற அடுத்தவர் அவ்வாறே கோட்டின்மூலம் எண்களை இணைத்து செயல்பாட்டை முடிக்க வேண்டும். கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளக் கூடாது, ஒன்றின் மேல் ஒன்று படக் கூடாது எனப் பல நிபந்தனைகள் உண்டு.

இன்றும் இதுபோன்ற கற்பலகை போன்ற டேப்லெட்டுகள் (கைக்கணினிகள்) குழந்தைகள் கைகளில் தவழுகின்றன. ஆனால், இப்படிப்பட்ட படங்கள் அதில் வரையப்படுகின்றனவா, அவ்வாறு வரையப்பட்டாலும் சக நண்பனோடு கற்பனை கலந்து கதை சொல்லும் செயல்பாடுகள் நடக்கின்றனவா, என்பதெல்லாம் கேள்விக்குறியே. இவ்வாறான செயல்பாடுகள் எல்லாம் கற்றலுக்குத் துணையாகும் கற்பனையாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்கத் துணைபுரியக் கூடியவை.

இவ்வாறான திறன் வளர்ச்சிக்கு ஒரு சுதந்திரமான மனப்பான்மை தேவை. அதுவும் எவ்வித நிபந்தனையுமில்லாத நண்பர்கள் வட்டாரத்தில் கலந்துரையாடும் வாய்ப்பென்பது பல்வேறு புதிய பரிமாணங்களை அறிமுகம் செய்துவைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக உறவுகளை உயிரோட்டமாக வைக்கும்.

மின்னணுச் சாதனங்களை வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் என்கிற அளவில் அனுமதிப்பதில் தவறில்லை. ஆனால், அதே நேரம் எல்லாப் பணிகளையும் அந்தச் சாதனைங்களை மையமாகக் கொண்டே செய்வது என்பது ஆரோக்கியமானதல்ல. சக மாணவர்களுடன் இணைந்து கற்கும்போது கிடைக்கும் வாய்ப்புகளைப்போல மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திக் கற்பது உயிரோட்டமாக இருக்காது.

மின்னணுச் சாதனங்கள்மூலம் ஒரே இடத்தில் அமர்ந்து, ஒரே வகையான செயல்பாடுகளில் ஈடுபடுவது மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எந்த அளவுக்கு எண்மக் கற்றல் வளங்களை வகுப்பறை கற்றல் கற்பித்தல் முறைகளில், மதிப்பீட்டு முறைகளில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அளவுகோல்கள் உருவாக்கப்பட வேண்டும். இது உலகளாவிய சவால் என்பதால் உலகம் முழுக்க ஒரே சமமாகக்கூட வகுக்கப்பட வேண்டும்.

இன்றைக்கு பலரும் அறிதிறன்பேசியில் குரல் மூலம் தட்டச்சு செய்கின்றனர். இதன் மூலம் குறிப்பேடுகளில் எழுதுவது என்பது மிகவும் அரிதாகி வருகிறது. இவ்வாறு வழக்கொழிந்த நிலையில் எப்போதாவது எழுத வேண்டும் என்றால், மிகவும் மெதுவாகவே எழுத முடிகிறது. அவ்வாறு எழுதும்போது கையெழுத்து பொலிவானதாக அமைவதில்லை. இவ்வாறான நிலைமை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுமானால் அவர்கள் எழுத்துத் தேர்வை அணுகுவது எவ்வளவு சவாலானதாக அமையும்.

மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருந்த கல்வி முறை, அந்த ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் ஏற்பாடாக மாறிக் கொண்டிருக்கிறது. அனைத்தும் வணிகமயமாகிவிட்ட சூழலில் மனிதர்கள் வாழ்வும், பரிவுடன் செயல்படும் வாழ்வியல் நெறிகளும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இந்தியா போன்ற நாடுகளில் மக்களிடையே உள்ள வறுமை, அவ்வளவு விரைவாக தனிப்பட்ட மாணவர்கள் மின்னணுச் சாதனங்களை கற்றலுக்குப் பயன்படுத்துவது சாத்தியமாக்கி விடாது. பாடநூல்கள் மூலம் கற்றல், குறிப்பேடுகளில் எழுதுதல் போன்ற நடைமுறைகள் தொடரும் ஏற்பாடுகள் வேண்டும். இதில் சமரசம் என்பதே கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com