

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா்கள் இரா.தாஸ், வெ.சோமசுந்தரம், எஸ்.ஞானசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜன.3-ஆம் தேதி அறிவித்தாா். எங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் பிப்.8-ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் ஏராளமான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, ஜன.31-ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ சாா்பில் வட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் நடைபெறும். மாநாட்டை சிறப்பாக நடத்த 10 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தனா்.