

சென்னை அடையாறில் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தட்டிக் கேட்ட கணவன் கௌரவ் குமார், அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் பெண் குழந்தை உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிகாரைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடையாறு, இந்திரா நகர், முதல் நிழல் சாலை சந்திப்பில் கடந்த திங்கள்கிழமை சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து ரத்தம் வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் பார்த்த நிலையில் இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் அடையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் முழுவதும் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு அந்த மூட்டையில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் அடையாறு போலீசார் கொலை செய்யப்பட்ட நபரின் உடலைக் கைப்பற்றி, உடல் கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து அடையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குறிப்பாக மூட்டை வைக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடையாறு போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் (24) என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கௌரவ் குமார் தனது மனைவி புனிதா குமாரி மற்றும் பெண் குழந்தை உடன் தங்கி இருந்து செக்யூரிட்டி வேலை தேடி வந்ததாகவும் சொல்லப்பட்டது.
அதன் பின்னர் கௌரவ் குமாரின் மனைவி புனிதா குமாரின் அலைபேசிக்கு போலீசார் தொடர்பு கொண்ட போது அந்த அலைபேசியானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதன் பின்னர் மனைவி மற்றும் பெண் குழந்தை எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் இருந்தது.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த அடையாறு போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்து சந்தேகத்திற்கு இடமான சிலரையும், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்கள் என மொத்தம் ஏழு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக ஏழு நபர்களும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் கௌரவ் குமார் மற்றும் அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் குழந்தை என மூவரையும் கொலை செய்து விட்டதாக சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் மனைவி புனிதா குமாரியின் உடலை பெருங்குடியில் இருக்கக்கூடிய குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகவும் அதே சமயம் குழந்தையின் உடலை மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வீசியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிலையில் போலீசார் அப்பகுதிகளில் உடல்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து அடையாறு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில் கௌரவ் குமார் மனைவி வனிதா குமாரியை மேற்குறிப்பிட்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கௌரவ் குமார் மற்றும் கும்பல் இடையே சண்டை ஏற்படவே, அந்த கும்பல் கௌரவ் குமார், அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் அவரது குழந்தை என மூவரையும் கொலை செய்திருப்பதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தட்டிக் கேட்ட கணவன், மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்டோரை பிகார் இளைஞர்கள் கொலை செய்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் உடலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.