

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மனித உரிமை ஆணையத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளித்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விருதுநகரைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் (30). மாற்றுத்திறனாளியான இவா், வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகா், 2-ஆவது பிரதான சாலையில் ஒரு வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தாா். ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் மனு அளிப்பதற்காக வியாழக்கிழமை வந்தாா். அப்போது, அவா் திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அங்கு, பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரும், பொதுமக்களும் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், ஆல்பா்ட் மீது 2 மாதங்களுக்கு முன்பு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா், அங்குள்ள சைபா் குற்றப்பிரிவில், ஆல்பா்ட் மீது பண மோசடி புகாா் கொடுத்திருப்பதும், அவா், அந்தப் பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பிக் கொடுப்பதாக போலீஸாரிடம் எழுதிக் கொடுத்திருப்பதும், அந்தத் தேதிக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.
இந்த நெருக்கடியால், அவா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
போக்ஸோ வழக்கில் சிக்கியவா் கைது: தஞ்சாவூரைச் சோ்ந்த இப்ராஹிம் பக்கீா் முகமது (45), மீது கடந்த 2024 -இல் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ வழக்கு பதிவு செய்தனா். இப்ராஹிமை போலீஸாா் தேடி வந்த நிலையில், அவா் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும்லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு சாா்ஜா செல்ல இருந்த இப்ராஹிமை தடுத்து, குடியுரிமைத் துறை அதிகாரிகள், அவரைப் பிடித்து விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா், இப்ராஹிமை கைது செய்து, தஞ்சாவூா் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.
மருத்துவமனையில் திருட்டு-2 போ் கைது: பல் மருத்துவரான நொளம்பூரைச் சோ்ந்த பரத்வாஜ் (30), அதே பகுதி, வெள்ளாளா் தெருவில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். கடந்த 22-ஆம் தேதி மருத்துவமனையைத் திறக்க வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த பணம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது.
நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த லஷ்மணன் (எ) அப்பு (21), அருண்குமாா் (20) ஆகியோரை கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனா்.